டெவால்ட் பிரெவிஸ் | கோப்புப்படம் 
விளையாட்டு

57 பந்துகளில் 162 ரன்கள் விளாசல்... - ஏபி டிவில்லியர்ஸையே வாயடைக்கச் செய்த ‘பேபி ஏபி’ டெவால்ட் பிரெவிஸ்!

ஆர்.முத்துக்குமார்

தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 லீக் தொடரில் 57 பந்துகளில் 162 ரன்கள் விளாசி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார் ‘பேபி ஏபி’ என அறியப்படும் டெவால்ட் பிரெவிஸ். அவரது இந்த அதிரடி ஆட்டத்தை அறிந்து கிரிக்கெட் உலகமே மிரண்டு போயுள்ளது.

19 வயதான அவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் டி20 லீகில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நைட்ஸ் அணிக்கு எதிராக நேற்று (அக். 31) நடைபெற்ற போட்டியில் வெறும் 35 பந்துகளில் சதம் விளாசினார். இந்த இன்னிங்ஸில் மொத்தம் 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்சர்களை விளாசி 162 ரன்கள் எடுத்து குருவுக்கு ஏற்ற சிஷ்யன் என ஏபி டிவில்லியர்ஸின் பெயரை காத்துள்ளார் அவர். அதோடு டி20 கிரிக்கெட் வரலாற்றில் 3-வது அதிவேக பெரிய இன்னிங்ஸ் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரெவிஸ்.

ஐபிஎல் அரங்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் இவரை ‘பேபி ஏபி டிவில்லியர்ஸ்’ என்றுதான் எல்லோரும் அழைக்கின்றனர். இந்த சூழலில் டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் பதிவு செய்துள்ள மூன்றாவது அதிகபட்ச ரன்களை அவர் பதிவு செய்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல், 66 பந்துகளில் 175 ரன்கள் விளாசி உள்ளார். அதே போல ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்துள்ளார். அவர்களுக்கு அடுத்ததாக இந்த 162 ரன்களை எடுத்துள்ளார் பிரெவிஸ்.

முன்னதாக, கடந்த ஜனவரி வாக்கில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் மட்டும் 506 ரன்களை அவர் எடுத்திருந்தார். அதன் மூலம் ஒரே தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அதோடு ஷிகர் தவான் வசம் இருந்த சாதனையை தகர்த்தார். இதோ இப்போது டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இவரது இந்த மிரட்டலான இன்னிங்ஸை பார்த்த டிவில்லியர்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “டெவால்ட் பிரெவிஸ்... இதற்கு மேல் எதுவும் சொல்லத் தேவையில்லை” என பதிவிட்டுள்ளார்.

நைட்ஸுக்கு எதிரான இந்த போட்டியில் அவர் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி தன் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். இவருடன் தொடக்கத்தில் ஆடிய ஜீவேஷன் பிள்ளை 52 ரன்கள் எடுத்தார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 179 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். கடைசி ஓவரில்தான் பிரெவிஸ் தந்து விக்கெட்டை இழந்திருந்தார். இவரது இந்த அதிரடியை அடுத்து டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. அதை விரட்டிய நைட்ஸ் அணி 230 ரன்கள் எடுத்தது. முடிவில் 41 ரன்கள் வித்தியாசத்தில் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் பிரெவிஸ், கரீபியன் ப்ரீமியர் லீகில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசி கிரிக்கெட் உலகின் கவனத்தை பெற்றிருந்தார். சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்க சூப்பர் லீக் டி20 தொடருக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி இவரை ஏலத்தில் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இவரது ஆட்டத்தைப் பார்த்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரும், சிஎஸ்கே முன்னாள் வீரருமான ஆல்பி மோர்கெல், “டெவால்ட் பிரெவிஸின் மாஸ்டர் கிளாஸ். எப்படியும் அடுத்த 15 ஆண்டுகள் பவுலர்களுக்கு கடும் நெருக்கடிதான்” என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT