இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரும் ரசிகர்களின் அன்புக்கு மதிப்பு கொடுக்கும் நபர்தான். அதை பலமுறை கேமரா கண்களுக்கு முன்னும், பின்னுமாக அரங்கேறி உள்ளதை அனைவரும் பார்த்துள்ளனர். இந்தச் சூழலில் யாரோ சிலர் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறையின் வீடியோவை எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவை கண்டு அதிருப்தி அடைந்துள்ளார் கோலி.
தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலிய நாட்டில் முகாமிட்டுள்ள இந்திய அணியுடன் கோலி உள்ளார். இந்தச் சூழலில் ‘கிங் கோலியின் ஹோட்டல் அறை’ என ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. விஷமத்தனமான இந்த வீடியோவை யாரோ ஒருவர் எடுத்து, அதை சமூக வலைதளத்திலும் அப்லோட் செய்துள்ளார்.
அது விராட் கோலியின் கவனத்திற்கும் சென்றுள்ளது. அதைப் பார்த்து அவர் அதிருப்தி அடைந்துள்ளார். அதோடு அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதோடு ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார்.
“தங்களுக்கு பிடித்த ஃபேவரைட் வீரர்களை பார்க்க வேண்டும் எனவும், அவர்கள் சந்திக்க வேண்டும் எனவும் விரும்புவார்கள். அது இயல்பு தான். அதை நான் புரிந்து கொள்கிறேன். அதை பாராட்டுபவனும் கூட. ஆனால் இதோ இந்த வீடியோ எனது பிரைவசி குறித்த கேள்விகளை எழுப்புகிறது. நான் தங்கியுள்ள ஹோட்டல் ரூமில் எனக்கு பிரைவசி இல்லையெனில் வேறு எங்கு நான் அதை எதிர்பார்க்க முடியும். இது மாதிரியான செயல்கள் சரியானதில்லை. தயை கூர்ந்து அனைவரது பிரைவசிக்கும் மதிப்பு கொடுங்கள். பொழுதுபோக்கிற்கான பொருளாக கருத வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் கோட் சூட் போட்ட நபர் ஒருவர் தனது செல்போனில் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளார் என்பது தெரிகிறது. அறை முழுவதையும் வீடியோ எடுத்துள்ளனர். அதில் கோலி பயன்படுத்தும் பொருட்களும் உள்ளன. இதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இதனை ஹோட்டல் ஊழியர்கள்தான் எடுத்திருக்க முடியும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக, இதே தொடரில் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவில் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்தும் புகார் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.