ஷார்ஜா டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அபாரமாக ஆடி வெற்றி பெற்றதையடுத்து மிஸ்பா உல் ஹக் கடும் ஏமாற்றமடைந்துள்ளார்.
2 டெஸ்ட் போட்டிகளில் தோற்று தொடரை இழந்த பிறகும் அபாரமாக மீண்டெழுந்த உறுதியைப் பெற்ற மே.இ.தீவுகள் அணி தரவரிசையில் கீழே உள்ளது. இப்படி தரவரிசையில் கீழே உள்ள அணியிடம் தோற்பது பின்னடைவே என்கிறார் மிஸ்பா உல் ஹக்.
“இந்த டெஸ்ட்டில் வெற்றி பெறாதது ஏமாற்றமாக உள்ளது. எங்கள் தரநிலைகளுக்கு ஏற்ப நாங்கள் ஆடவில்லை. எங்கள் பேட்டிங், பீல்டிங் மோசமாக இருந்தது. மேற்கிந்திய அணி கட்டுக்கோப்புடன் ஆடினர், நாங்கள் தவறுகளை இழைத்தவண்ணம் டெஸ்ட்டை இழந்தோம்.
நமக்கு பழக்கப்பட்ட நம் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியை இழப்பது பின்னடைவே, அதுவும் தரவரிசையில் நம்மை விட கீழே உள்ள அணியிடம் தோற்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. எதிரணி எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் சரி, வலுவாக மீண்டு எழ வேண்டாமா?
எங்கள் மனதில் ஒரே விஷயம் தான் இருக்கிறது, அனைத்துப் போட்டிகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், தொடரை வென்று விட்டோம் என்பதற்காக இந்தப் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இல்லை. நீண்ட தொடரில் சில வேளைகளில் நாம் சிறிது ரிலாக்ஸ் ஆவது வழக்கம்தான். இதுதான் எங்களுக்கும் நடந்தது. நாங்கள் எதிரணியினரை குறைவாக எடைபோட்டோம் என்றே நான் கருதுகிறேன். இதனால்தான் முந்தைய போட்டிகளிலும் சிக்கல் ஏற்பட்டது கடைசியில் டெஸ்ட் போட்டியை இழந்தோம்.
அடுத்த 2 டெஸ்ட் தொடர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து எவ்வளவு கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கு ஆடினாலும் முழுத்திறமைக்கேற்ப ஆடினால் எங்களால் வெற்றி பெற முடியும். இந்த இழப்பினால் எங்கள் உத்வேகம் சற்று குறைந்துள்ளது. ஆனால் மீண்டும் கடினமாக உழைத்து மேலே வருவோம்.
5-ம் நாளில் கூட ஸ்பின்னர்களுக்கு பந்து திரும்பவில்லையெனில் என்ன பிட்ச் இது?” இவ்வாறு கூறியுள்ளார் மிஸ்பா உல் ஹக்.