விளையாட்டு

அனல் பறக்கும் அக்னி யுத்தம்: மேஜிக் மெஸ்ஸியா, அதிரடி அர்ஜெனா?

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரையிறுதியில் நெதர்லாந்தும், அர்ஜென்டீனாவும் இன்று மோதுகின்றன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடும் என்பதால் இந்தப் போட்டி அனல் பறக்கும் அக்னி பரீட்சையாக இருக்கும்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் அர்ஜென்டீனா இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தங்களுடைய சொந்த கண்டத்தில் நடைபெறும் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் நெதர்லாந்து அணி மூன்று முறை உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியபோதும் இதுவரை கோப்பையைவெல்லவில்லை.

தொடர்ந்து நழுவிக் கொண்டிருக்கும் உலகக் கோப்பையை இந்த முறை வென்றுவிட வேண்டும் என்பதில் அந்த அணி தீவிரமாக உள்ளது.

மெஸ்ஸி பலம்

உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்கு முன்பு வரை கோலடிப்பதில் கேப்டன் லயோனல்மெஸ்ஸியை மட்டுமே நம்பியிருந்தது அர்ஜென்டீனா. ஆனால் காலிறுதிக்கு முந்தைய சுற்று மற்றும் காலிறுதியில் மெஸ்ஸி கோலடிக்காதபோதிலும் அர்ஜென்டீனா வெற்றி கண்டது. அதே நேரத்தில் கோல் வாய்ப்புகளை உருவாக்கியதில் மெஸ்ஸியின் பங்கு கணிசமாக இருந்தது.

டி மரியாவுக்கு காயம்

அர்ஜென்டீனாவின் மற்றொரு பலம் வாய்ந்த வீரரான டி மரியா காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். அதேநேரத்தில் கடந்த போட்டியில் கோலடித்து வெற்றி தேடித்தந்த ஹிகுவெய்ன் இந்த ஆட்டத்திலும் அர்ஜென்டீனாவிற்கு பலம் சேர்ப்பார் என நம்பலாம். சஸ்பெண்ட் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத மார்கஸ்

ரோஜோ இந்த ஆட்டத்தில் களமிறங்குவது அர்ஜென்டீனாவிற்கு கூடுதல் பலமாகும். அர்ஜென்டீனா அணியைப் பொறுத்தவரையில் ரோமேரோ, ஸபலெட்டா, டெமிசெலிஸ், கேரேய், மார்கஸ் ரோஜோ, பெரஸ், மாஸ்கெரனோ, பில்கிளியா, மெஸ்ஸி, லெவஸ்ஸி, ஹிகுவெய்ன் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டீனா தான் விளையாடிய 5 போட்டிகளில் 3-ல் தலா ஒரு கோல் மட்டுமே அடித்து வெற்றி கண்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் 7 கோல்களை மட்டுமே அடித்துள்ளது. அதிலும் மெஸ்ஸி 4 கோல் அடித்துள்ளார்.

மிரட்டும் அர்ஜென் ராபன்

ஆனால் நெதர்லாந்து அணியோ இதுவரை 12 கோல்கள் அடித்துள்ளது. அந்த அணியில் உள்ள 7 வீரர்கள் இதுவரை கோலடித்துள்ளனர். குறிப்பாக அர்ஜென் ராபன், வான் பெர்ஸி, வெஸ்லே ஸ்நைடர் ஆகியோரை பலவீனமான பின்களத்தைக் கொண்ட அர்ஜென்டீனா எப்படி சமாளிக்கிறது என்பதைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.

நெதர்லாந்து அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்வது அர்ஜென் ராபன்தான். இந்த உலகக் கோப்பையின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடி வரும் ராபனின் அதிவேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரணி கோல் கீப்பர்களும், பின்கள வீரர்களும் தடுமாறி வருகின்றனர். நெதர்லாந்து அணி முன்களம், நடுகளம், பின்களம் என எல்லாவற்றிலும் வலுவாக இருந்தபோதும், கோஸ்டா ரிகாவுக்கு எதிராக கோலடிக்காமல் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்று வெற்றி கண்டது ஏமாற்றமாக அமைந்தது.

ஆடும் லெவன்

அர்ஜென் ராபன், வான் பெர்ஸி ஆகியோர் இதுவரை தலா 3 கோல்களும், மெம்பிஸ் இரு கோல்களும் அடித்துள்ளனர். மிட்பீல்டர் வெஸ்லே ஸ்நைடர் உலகக் கோப்பையின் 6 நாக் அவுட் போட்டிகளில் 5 கோல்கள் அடித்துள்ளார். அவருடைய அதிர்ஷ்டம் இந்த ஆட்டத்திலும் நெதர்லாந்துக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேஸ்பர் சிலிசென் (கோல் கீப்பர்), ஸ்டீபன் டி விரிஜ், விளார், புருனோ மார்ட்டின்ஸ், டிர்க் குயட், டேலி பிளைன்ட், அர்ஜென் ராபன், ஜார்ஜினியோ வினால்டும், வெஸ்லே ஸ்நைடர், ராபின் வான் பெர்ஸி, மெம்பிஸ் தேபேய் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுமே போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளாது என்றபோதிலும் உலகின் பல்வேறு கால்பந்து ஜாம்பவான்களும், பிரபல பத்திரிகைகளும் அர்ஜென்டீனாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என கணித்துள்ளன. அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்த வாய்ப்புள்ளதாக பலர் கணித்துள்ளனர். அவர்களின் கணிப்பு பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோப்பையை இழப்பதற்கு சமம்

நெதர்லாந்து வீரர் டிர்க் குயட் கூறுகையில், “இந்த அரையிறுதிப் போட்டி மிகச்சிறந்த ஒரு போட்டி. இதில் தோற்றால் உலகக் கோப்பையையே இழந்தது போன்றதாகும். இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம்.

அர்ஜென்டீனா உலகத் தரம் வாய்ந்த அணியாகும். அந்த அணி அரையிறுதியில் விளையாடுவதற்கு தகுதியான அணி. ஆனால் நாங்கள் சிறப்பாக ஆடி அவர்களை வீழ்த்த விரும்புகிறோம். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்” என்றார்.

கத்திமுனைப் போராட்டம்

அர்ஜென்டீன வீரர் ஜேவியர் மாஸ்கெரனோ கூறுகையில், “இந்தப் போட்டி கத்திமுனையில் நடக்கும் போராட்டத்தைப் போன்றது. அதிவேக அணியுடன் மோதவுள்ளோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் பந்தை தேவையில்லாமல் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்து இழக்காமல் இருப்பது அவசியம். சூழலுக்கு ஏற்றவாறு தீவிர கவனம் செலுத்தி ஆடுவது அவசியம். முடிவுகள் எடுக்கும்போது நிதானம் தேவை” என்றார்.

நெதர்லாந்து, அர்ஜென்டீனா ஒரு பார்வை

நெதர்லாந்து அணி உலகக் கோப்பையில் 12 முறை தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணிகளை சந்தித்துள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் (1978-ல் இறுதிச்சுற்றில் அர்ஜென்டீனாவிடம் தோல்வி, 1994-ல் பிரேசிலிடம் தோல்வி) மட்டுமே தோல்வி கண்டுள்ளது.

இந்த உலகக் கோப்பையில் நெதர்லாந்து 12 கோல்கள் அடித்துள்ளது. அதில் 10 கோல்கள் 2-வது பாதி ஆட்டத்தில் அடிக்கப்பட்டதாகும். அதிலும் கடைசி 4 கோல்கள் 75-வது நிமிடத்திற்கு பிறகு அடிக்கப்பட்டவை. கோஸ்டா ரிகாவுக்கு எதிரான காலிறுதியில் நெதர்லாந்து 692 முறை பந்தை துல்லியமாகக் கடத்தியது. 1966 முதல் 2014 வரையிலான காலத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் இது சாதனையாகும்.

இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி அதிகமுறை (19) கோல் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுகள் இரண்டிலும் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டுள்ளது அர்ஜென்டீனா. இதற்கு முன்னர் 1986, 1990 உலகக் கோப்பை போட்டிகளிலும் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கிலேயே நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது. நெதர்லாந்து உலகக் கோப்பையில் விளையாடிய கடைசி 12 ஆட்டங்களில் 11-ல் வெற்றி கண்டுள்ளது.

இதுவரை…

இந்த இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளன. அதில் அர்ஜென்டீனா ஒரு முறையும், நெதர்லாந்து 4 முறையும் வெற்றி கண்டுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இந்த போட்டிகளில் 19 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் நெதர்லாந்து 13 கோல்களையும், அர்ஜென்டீனா 6 கோல்களையும் அடித்துள்ளன.

உலகக் கோப்பையில் பெஸ்ட்

அர்ஜென்டீனா : 1978, 1986-ல் சாம்பியன்

நெதர்லாந்து : 1974, 1978, 2010 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்றில் தோல்வி

உலகக் கோப்பையில்…

உலகக் கோப்பையில் இந்த இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. அதில் நெதர்லாந்து இரு முறையும், அர்ஜென்டீனா ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. அதன் விவரம்:

1974 : 2-வது சுற்று : நெதர்லாந்து (4) - அர்ஜென்டீனா (0)

1978 : இறுதிச்சுற்று : அர்ஜென்டீனா (3) - நெதர்லாந்து (1)

1998 : காலிறுதி : நெதர்லாந்து (2) - அர்ஜென்டீனா (1)

2006 : குரூப் சுற்று : அர்ஜென்டீனா (0) - நெதர்லாந்து (0)

இந்த உலகக் கோப்பையில் கடந்து வந்த பாதை

விளையாடிய ஆட்டங்கள்

நெதர்லாந்து 5

அர்ஜென்டீனா 5

வெற்றி

நெதர்லாந்து 5

அர்ஜென்டீனா 5

அடித்த கோல்கள்

நெதர்லாந்து 12

அர்ஜென்டீனா 7

இலக்கை நோக்கியடித்த ஷாட்கள்

நெதர்லாந்து 70%

அர்ஜென்டீனா 60%

தவறுகள்

நெதர்லாந்து 91

அர்ஜென்டீனா 54

மஞ்சள் அட்டை

நெதர்லாந்து 7

அர்ஜென்டீனா 5

ரெட் கார்டு

நெதர்லாந்து 0

அர்ஜென்டீனா 0

SCROLL FOR NEXT