விளையாட்டு

விஜய், புஜாரா அபார சதங்களுடன் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள்

இரா.முத்துக்குமார்

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டமான இன்று முரளி விஜய், செடேஸ்வர் புஜாரா ஆகியோர் சதம் எடுக்க இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

குழிபிட்ச் இல்லையேல் தார்ச்சாலை பிட்ச் என்ற இந்திய பிட்ச் நிர்வாகத்திற்கு இணங்க ராஜ்கோட் செயல்படுகிறது. இம்முறை ஒரு மாற்றத்திற்காக தார்ச்சாலை.

முரளி விஜய் 259 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 103 ரன்களுடனும், புஜாரா 178 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 107 ரன்களுடனும் ஆடி வந்தனர், ஆனால் புஜாரா கடைசியில் 206 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்து, பந்து வீச்சில் லைன் லெந்துக்கு போராடிய ஸ்டோக்ஸ் வீசிய வெளியே சென்ற பந்தை நேராக குக் கையில் திருப்பி வெளியேறினார்.

முரளி விஜய் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 301 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து அடில் ரஷீத்தின் கூக்ளியை நேராக ஷார்ட் லெக்கில் ஹமீத் கையில் அடித்தார்.

இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 209 ரன்களைச் சேர்த்தனர், விராட் கோலி 26 ரன்களுடன் ஒருமுனையில் நிற்க தேவையில்லாலம் இரவுக்காவலனாக இறக்கப்பட்டு அமித் மிஸ்ரா பலிவாங்கப்பட்டார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அன்சாரியின் பந்தை ஷார்ட் லெக்கில் ஹமீதிடம் கேட்ச் கொடுத்து வெளியேற இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது.

இன்று காலை 63/0 என்று தொடங்கிய இந்திய அணி கவுதம் கம்பீரை அவரது சொந்த எண்ணிக்கையான 29 ரன்களில் இழந்தது. ஸ்டூவர்ட் பிராட் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீசிய பந்து யார்க்கர் லெந்தில் பெரிய அளவில் உள்ளே வர கம்பீர் ஆஃப் திசையில் நகர்ந்து லெக் திசையில் பந்தை தட்டி விட முயன்றார், முன்னங்கால் சற்று கூடுதலாகவே முன்னால் நகர மட்டையை அவரால் சரியான நேரத்தில் பந்தின் மேல் இறக்க முடியவில்லை, கால்காப்பைத்தாக்க எல்.பி.ஆனார்.

அதன் பிறகு புஜாரா இறங்கினார், தொடக்கத்தில் ஷார்ட் பிட்ச் உத்தியை எதிர்கொண்டார், ஹெல்மெட் இல்லையெனில் அவர் இந்நேரம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்திருப்பார்.

தொடர்ந்து ஆக்சன் ரீப்ளே போல் வோக்ஸ் வீசிய 3 பவுன்சர்களையும் பந்திலிருந்து கண்ணை எடுத்து முகத்தை வலது புறம் திருப்பி ஹெல்மெட்டில் வாங்கினார், ஆனால் அவர் பதற்றமடையவில்லை.

மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. முதல் செஷனில் இந்திய அணி 27 ஓவர்களில் 99 ரன்கள் சேர்த்தது. உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர்ந்த முரளி விஜய்-புஜாரா ஜோடி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பொறுமையை சோதித்தது.

புஜாரா அருமையான சில ஷாட்களை ஆடினார். விஜய்யை காட்டிலும் வேகமாக ரன் குவித்தார். விஜய் அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி 3 சிக்சர்களை அடித்தார், சதம் அடிப்பதற்கு முன்பாக 90களுக்கு நுழைய லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார் விஜய், பிறகு பிராடை ஒரு அருமையான பிளிக் அடுத்து ஒரு எட்ஜ் பவுண்டரி என்று சதம் அடித்தார்.

உணவு இடைவேளைக்கு முன்பாக கடைசி ஓவரை அடில் ரஷீத் வீச கூக்ளியில் கால்காப்பில் பட கடுமையான முறையீடு எழுந்தது, விஜய் பதற்றமடைந்தார், ஆனால் ரிவியூ செய்யவில்லை, செய்திருந்தாலும் இங்கிலாந்துக்கு தோல்விதான் ஏற்பட்டிருக்கும், காரணம் பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றது. அடுத்த பந்து எட்ஜைக் கடந்து சென்றது லெக்ஸ்பின். இப்படி தடுமாறிய பிறகு 66 ரன்களில் விஜய் இருந்த போது 19 வயது இளம் வீரர் ஹசீப் ஹமீது கவர் திசையில் கேட்சைக் கோட்டை விட்டார், பிராட் கடும் கடுப்பானார். கடுமையாக உழைத்து ஒரு வாய்ப்பை உருவாக்கினால் அது தவறவிடப்படும் போது ஏற்படும் நியாயமான கோபம் பிராடினுடையது.

இவர்கள் நிலைத்து நின்று ரன் சேர்க்க தொடங்கியதால் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் தவித்தார். தேநீர் இடைவேளையில் இந்திய அணி 79 ஓவர்களில் மேற்கொண்டு விக்கெட்களை இழக்காமல் 228 ரன்கள் சேர்த்தது. இந்த 2-வது செஷனில் இந்திய அணி 29 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தது. பிராட் 10 ஓவர்களில் 18 ரன்களையே கொடுத்தார், இங்கிலாந்து கட்டுக்கோப்புடன் வீசி இந்திய பவுண்டரிகளை வறளச் செய்தது.

புஜாரா 86 ரன்களை சேர்த்திருந்த போது ஜாபர் அன்சாரியின் சுழலில் எல்பிடபிள்யூ முறையில் சிக்கினார். களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்க புஜாரா டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தார்.

இதை ஆய்வு செய்த டி.வி. நடுவர் ராடு டிக்கர், புஜாரா அவுட் இல்லையென கள நடுவரின் முடிவை மாற்றி அறிவித்தார். இதை ரசிகர்களுடன் இருக்கையில் அமர்ந்தபடி பார்த்த புஜாராவின் மனைவி பூஜா துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தேநீர் இடைவேளைக்கு பின்னர் இந்த ஜோடி சதம் அடித்து அசத்தியது. புஜாரா 169 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 9-வது சதத்தையும், பொறுமையாக விளையாடிய முரளி விஜய் 254 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 7-வது சதத்தையும் விளாசினர்.

இந்த ஜோடியை ஒருவழியாக கிறிஸ் வோக்ஸ் பிரித்தார். ஸ்கோர் 277 ஆக இருந்த போது பென் ஸ்டோக்ஸ் பந்தில் புஜாரா சிலிப் திசையில் நின்ற குக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். புஜாரா 206 பந்துகளில், 17 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்தார். 2-வது விக்கெட்டுக்கு அவர் முரளி விஜய்யுடன் இணைந்து 67 ஓவர்களில் 209 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து கேப்டன் விராட் கோலி, முரளி விஜய்யுடன் இணைந்தார். இந்த ஜோடி மிக நிதானமாக விளையாடியது. 3-வது நாள் முடியும் தருவாயில் முரளி விஜய் விக்கெட்டை அடில் ரஷித் கைப்பற்றினார். முரளி விஜய் 301 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய நைட் வாட்ச்மேன் அமித் மிஸ்ரா 2 பந்துகளை சந்தித்த நிலையில் அன்சாரி பந்தில் ஆட்டமிழக்க 3-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி 108.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராடு, அன்சாரி, அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 218 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 6 விக்கெட்களுடன் இந்திய அணி இன்றைய 4-வது நாள் ஆட்டத்தை விளையாட உள்ளது.

SCROLL FOR NEXT