விளையாட்டு

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு அறிவித்த இயக்குநர் ஷங்கர் மருமகன்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற நினைப்பதாக இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி துத்திபட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானம் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, மைதானத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இந்தத் தடைகள் நீக்கப்பட்டு மைதானத்தில் இப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், துத்திபட்டு மைதானம் மூடப்பட்டபோது இளங்கோவடிகள் அரசுப் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாரில், பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன் மகன் ரோஹித் பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன். ரோஹித்துக்கும் இயக்குநர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதனால் இந்த வழக்கு கவனம் பெற்றது. இந்த சம்பவம் குறித்து நீண்ட நாள்களுக்கு பிறகு ரோஹித் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "மிக ஆழமாகவும், போதுமான அளவு யோசித்து நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். எனக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்து, நான் யார் என்பதை வெளிப்படுத்தி எனக்கான வாழ்வின் மிகச்சிறந்த துணையாக இருப்பது கிரிக்கெட்.

என் வாழ்வின் முக்கிய அங்கமான கிரிக்கெட்டுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க கடமைப்பட்டுள்ளேன். ஆனால் சில நாட்கள் முன் நடந்த சம்பவத்தால் கிரிக்கெட் துறையில் எனக்கான மதிப்பை இழந்தும் மன அமைதியை இழந்தும் நிற்கிறேன். இப்போது மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். இதிலிருந்து மீண்டு வர நினைப்பதால் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற நினைக்கிறேன். அவதூறு தருணங்களில் எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு, எனது நன்றிகள். மீண்டும் சரியான நேரத்தில் நான் வருவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT