விளையாட்டு

டி20 உலகக் கோப்பை | அதிக ரன்கள் குவித்த 2-வது வீரர் விராட் கோலி

செய்திப்பிரிவு

சிட்னி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார் கோலி. இதன்மூலம் 23 உலகக் கோப்பை டி20 ஆட்டங்களில் பங்கேற்று 989 ரன்களைக் குவித்துள்ளார் அவர். சராசரி 89.90. இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார் கோலி. முதலிடத்தில் இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனே 1,016 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் மேற்கிந்தியத் தீவு அணி வீரர் கிறிஸ் கெய்ல் 965 ரன்களுடன் உள்ளார்.

2014 (319 ரன்கள்), 2017 (273 ரன்கள்) டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதையும் விராட் கோலி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பை தொடரில் 2 முறை தொடர்நாயகன் விருதைப் பெற்ற ஒரே வீரர் கோலி மட்டுமே.

3 வீரர்கள் ஒரே போட்டியில் 50: டி20 உலகக் கோப்பை போட்டியில் 3-வது முறையாக ஓர் அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் ஒரே போட்டியில் 50-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளனர். இதற்கு முன்பு 2007-ல் டர்பனில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும், 2016-ல் மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளிடையிலான ஆட்டத்திலும் ஒரே அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் 50-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்திருந்தனர்.

4-வது முறையாக 50+: டி20 போட்டிகளில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி, 4-வது முறையாக 50-க்கும் மேற்பட்ட ரன்களைக் கூட்டாக எடுத்துள்ளது. துபாயில் ஹாங்காங் அணிக்கெதிராக 42 பந்துகளில் 98 ரன்களும், ஹைதராபாதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 62 பந்துகளில் 104 ரன்களும், குவாஹாட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 42 பந்துகளில் 102 ரன்களும், நேற்று சிட்னியில் நெதர்லாந்துக்கு எதிராக 48 பந்துகளில் 95 ரன்களும் கூட்டாக இந்த ஜோடி எடுத்துள்ளது.

அதிக சிக்ஸர்கள்: டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 34 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல், 63 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் யுவராஜ் சிங் 33 சிக்ஸர்களும், விராட் கோலி 23 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT