விளையாட்டு

மே. இ.தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 281 ரன்களில் சுருண்டது பாக்.

செய்திப்பிரிவு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் 83 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. ஷமி அஸ்லாம் 74, யூனுஸ்கான் 51, மிஸ்பா உல்-ஹக் 53, சர்ப்ராஸ் அகமது 51 ரன்கள் சேர்த்தனர். யாசிர் ஷா 1, முகமது அமீர் 6 ரன்களுடன் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

மேற்கொண்டு 26 ரன்களை சேர்ப்பதற்குள் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. யாசிர் ஷா 12, முகமது அமீர் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். 90.5 ஓவர்களில் 281 ரன்களுக்கு பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் தேவேந்திர பிஷூ 4, கபேரியல் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 78 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.

ஜான்சன் 1, டேரன் பிராவோ 11, மார்லன் சாமுவேல்ஸ் 0, பிளாக்வுட் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். 68 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் தொடக்க வீரர் பிராத் வெயிட்டுடன் இணைந்த ராஸ்டன் சேஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 89 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த டவுரிச் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பிராத் வெயிட் 95 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர், வகாப் ரியாஸ் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். கைவசம் 4 விக்கெட்கள் உள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 37 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

SCROLL FOR NEXT