சிக்கந்தர் ரசா 
விளையாட்டு

145 ரன்கள், 8 விக்கெட்டுகள்: நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரசா ராஜாங்கம்

Ellusamy Karthik

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டரும், அனுபவ வீரருமான சிக்கந்தர் ரசா தனது அபார கிரிக்கெட் திறன் மூலம் ராஜாங்கம் செய்து வருகிறார். இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 145 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் 8 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார்.

யார் இவர்? 36 வயதான அவர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2002 வாக்கில் அவரது குடும்பம் ஜிம்பாப்வே நாட்டிற்கு குடியேறி உள்ளது. இளம் வயதில் விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்பியுள்ளார். ஆனால் அவரது பார்வை திறன் காரணமாக அந்த வாய்ப்பை இழந்துள்ளார். பின்னர் ஸ்காட்லாந்தில் மென்பொருள் பொறியியல் பட்டம் முடித்துள்ளார்.

கிளப் கிரிக்கெட் விளையாடி வந்த போதுதான் தனது கிரிக்கெட் திறனை அவர் உணர்ந்துள்ளார். தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் பிரேக் பவுலரான அவரது திறன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இருந்தும் அவர் அந்த நாட்டின் குடிமகனாக இல்லாதது ஒரு பின்னடைவாக இருந்துள்ளது.

2013-இல் ஜிம்பாப்வே அணிக்காக மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். இதுவரை 17 டெஸ்ட், 123 ஒருநாள் மற்றும் 61 டி20 என சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 6019 ரன்கள் மற்றும் சுமார் 137 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.

நடப்பு ஆண்டில் அபார ஃபார்ம்: நடப்பு ஆண்டான 2022-இல் அவர் அபாரமான ஃபார்மில் உள்ளார். 20 டி20 போட்டிகளில் விளையாடி 652 ரன்கள் மற்றும் 7 கேட்சுகளை பிடித்துள்ளார். பவுலிங்கில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதில் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 155.24.

15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 645 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

2022 டி20 உலகக் கோப்பை: நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு மேட்ச் வின்னராக ஜொலித்து வருகிறார். முதல் சுற்றில் அயர்லாந்து அணிக்கு எதிராக 82 ரன்கள் குவித்தார். ஸ்காட்லாந்துக்கு எதிராக 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிராக தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்ட நாயகன்: சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஷதாப் கான் மற்றும் ஹைதர் அலியை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இருந்தார். இருந்தும் ஹாட்-ட்ரிக் வாய்ப்பை மிஸ் செய்தார். 44 ரன்கள் எடுத்து நிலைத்து நின்று ஆடி வந்த ஷான் மசூத் விக்கெட்டை 16-வது ஓவரில் கைப்பற்றினார். இந்த மூன்று விக்கெட்டுகளுக்கு இடையிலான இடைவெளி வெறும் 5 பந்துகள்தான். அடுத்ததாக ஜிம்பாப்வே அணி வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் இந்தியாவை சூப்பர் 12 சுற்றில் எதிர்கொள்ள உள்ளது. அதில் ரசாவின் பங்கு பெரிய அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT