விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ். 
விளையாட்டு

T20 WC | பேட்டிங்கில் மிரட்டிய ரோகித், கோலி & சூர்யகுமார் யாதவ்: நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு

செய்திப்பிரிவு

சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்திருந்தது. இந்திய அணிக்காக ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி இருந்தனர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ராகுல் 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார்.

இருந்தும் அதை அவர் ரிவ்யூ செய்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த பந்து ஸ்டம்புகளை தகர்க்க தவறியது. அது டிவி ஒளிபரப்பில் தெளிவாக தெரிந்தது. பின்னர் கோலியும், ரோகித்தும் 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித், 39 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அவுட்டானார்.

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி. இருவரும் 95 ரன்களை சேர்த்திருந்தனர். கோலி 37 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். கடந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் 82 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் அவுட்டானதும் கோலியும், சூர்யகுமாரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவிப்பதில் ஆர்வம் செலுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. கோலி 62 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 25 பந்துகளில் அரைசதம் பதிவு செய்திருந்தார் அவர்.

நெதர்லாந்து அணி இந்த போட்டியில் இரண்டு கேட்சை நழுவவிட்டு இருந்தது. ஆனாலும் அந்த அணி ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் பவுண்டரி வாய்ப்புகளை தடுத்தது. எப்படியும் பவுண்டரி லைனில் தரமான ஃபீல்டிங் மூலம் சுமார் 20 ரன்களை அந்த அணி சேவ் செய்திருக்கும். இப்போது 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அந்த அணி விரட்டுகிறது.

SCROLL FOR NEXT