கால்பந்து போட்டிகளில் விதிகளுக்கு உள்பட்டு நேர்மையாக விளையாடாத வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச கால்பந்து சம்மேளனத்துக்கு (ஃபிபா) அதிகாரம் உண்டு. இதன்படி நெதர்லாந்து முன்கள வீரர் அர்ஜென் ரூபென் மீது ஃபிபா நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. எனவே சில போட்டிகளில் பங்கேற்க அவருக்கு தடை கூட விதிக்கப்படலாம்.
தனது செய்கைக்காக வருத்தம் தெரிவித்ததன் மூலம், வேண்டுமென்றே கீழே விழுந்து ஏமாற்றி பெனால்டி வாய்ப்பு பெற்றதை அர்ஜென் ரூபென் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது ஃபிபா ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் இனரீதியாக தாக்கிப்பேசுவது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, களத்தில் ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபட்டால், அது தொடர்பான வீடியோ பதிவை ஆய்வு செய்து வீரர்கள்நடவடிக்கை எடுக்க ஃபிபாவுக்கும் அதிகாரம் உண்டு. இது தொடர்பாக உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே போட்டியில் பங்கேற்கும் நாடுகளுக்கு ஃபிபா தகவல் தெரிவித்துள்ளது.