மெல்பேர்ன்: இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் மழை குறுக்கிட்ட காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் (DLS) முறையில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தோல்வி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அயர்லாந்து அணி முதலில் பேட் செய்து 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஆண்ட்ரூ 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். டக்கர் 34 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் மற்றும் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகளும், சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. அந்த அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கேப்டன் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரில் பெவிலியன் திரும்பினார். அதனால் இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது. ஹாரி 18 ரன்களிலும், மலான் 35 ரன்களிலும் அவுட்டாகி இருந்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஸ்டோக்ஸ் சொற்ப ரன்களில் அவுட்டாகி இருந்தனர். 14.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து. களத்தில் மொயின் அலி 24 ரன்கள் எடுத்திருந்தார். லிவிங்ஸ்டன் ஒரே ஒரு ரன் எடுத்திருந்தார். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதித்தது.
டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அதனை காட்டிலும் 5 ரன்களை குறைவாக இருந்தது அந்த அணி. அதனால் அயர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. லிட்டில், பேரி, ஹேண்ட், ஜார்ஜ் போன்ற அயர்லாந்து பவுலர்கள் விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணி ஆட்டத்தை இழந்திருப்பது குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையிலான அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசிக்க செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி, நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல மழை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு அடுத்தபடியாக பெரிய அணியான இங்கிலாந்து அணி பாதிக்கப்பட்டுள்ளது.