கிரிக்கெட் உலகில் விராட் கோலியை வேறு எந்தவொரு வீரருடனும் ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக். நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் தனது அபாரமான பேட்டிங் திறன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார் கோலி. அவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்களில் ஒருவராக உள்ளார் மாலிக்.
இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாடி வருபவர் கோலி. மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர். Fab 4 வீரர்களில் ஒருவர். இருந்தாலும் இவருடன் வெவ்வேறு வீரர்களை பலரும் ஒப்பிடப்படுவது வழக்கம். அதில் பிரதானமான வீரராக இருப்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம்.
இந்தச் சூழலில்தான் கோலியை வேறு எந்த வீரருடனும் ஒப்பிடவே முடியாது என மாலிக் தெரிவித்துள்ளார். “அபாரமான கிரிக்கெட் போட்டியை நாம் கண்டு களித்தோம். உண்மையில் விராட் கோலி ஒரு பீஸ்ட் தான். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவரது கிளாஸான ஆட்டத்தை யாருடனும் ஒப்பிடவே முடியாது. அவரால் நிலைத்து நின்று விளையாட முடியும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய முடியும், அவரால் சிக்சர் விளாச முடியும் மற்றும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் கலையையும் அவர் அறிந்தவர்” என மாலிக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் கோலி, 53 பந்துகளில் 82 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.