தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நேற்று நடக்க இருந்த டி20 உலகக்கோப்பை போட்டி மழையின் காரணமாக முடித்து வைக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. மழையின் காரணமாக இப்போட்டி தாமதமாகவே தொடங்கியது. மேலும் போட்டி தலா 9 ஓவர்களாக குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. ஜிம்பாப்வே சார்பில் மதவீர் மட்டும் நின்று அதிரடியாக ஆட, அவரின் 18 பந்துகளில் 35 ரன்கள் உதவியுடன் 9 ஓவர்களில் 79 ரன்களை எடுத்திருந்தது.
9 ஓவர்களுக்கு 80 ரன்கள் இலக்கை நோக்கி இறங்கிய தென்னாப்பிரிக்கா பேட்டிங்கின் போது மீண்டும் மழை குறுக்கிடும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட்டை ஆரம்பித்தனர். சத்தாரா வீசிய முதல் ஓவரில் மட்டும் டீகாக் 23 ரன்களை குவித்தார். எதிர்பார்த்தபடி மழை மீண்டும் பெய்ய DLS முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அணி 7 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்க வேண்டும் என புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தால், வெற்றி தென்னாபிரிக்கா பக்கமே இருந்தது. 3 ஓவர்களில் 51 ரன்களை எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. போட்டியில் முடிவை எட்டுவதற்கு இரு அணிகளும் குறைந்தபட்சமாக 5 ஓவர்களையாவது ஆடியிருக்க வேண்டும் என்று விதியின் அடிப்படையில் போட்டி ஒரு முடிவை எட்ட முடியவில்லை என்று ஐசிசி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
உலகக்கோப்பைகளில் தென்னாப்பிரிக்கா அணி மழையினால் பாதிக்கப்படுவது இது முதல்முறை கிடையாது. 1992 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியை அதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்போது இந்த போட்டியும் மழையால் தென்னாபிரிக்க அணிக்கு சோகமாக முடிந்துள்ளது.