அயர்லாந்து–இலங்கை போட்டி 
விளையாட்டு

T20 WC | அயர்லாந்தை திணறடித்த சுழற்பந்துவீச்சு - 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி 

செய்திப்பிரிவு

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் இலங்கை , நெதர்லாந்து , ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட் லாந்து , நமீபியா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை வெளியேற்றப்பட்டன. சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து , ஆப்கானிஸ் தான், இலங்கை அயர்லாந்து அணிகளும் , குரூப்-2 பிரிவில் இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா , வங்காளதேசம் ஜிம்பாப்வே , நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்று உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கிய நிலையில், குரூப்-1 பிரிவில் உள்ள இலங்கை- அயர்லாந்து அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அணிக்கு பால் ஸ்டிர்லிங் - பால் பிரீன் இணை துவக்கம் கொடுத்தது. கேப்டன் பால் பிரீன் 1 ரன்னில் வெளியேற, பால் ஸ்டிர்லிங் 34 ரன்களை சேர்த்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், ஹர்ரி டேக்டர் மட்டும் 42 பந்துகளில் 45 ரன்களை சேர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை சேர்த்தது.

129 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு குஷல் மெண்டீஸ், தனஜய டி சில்வா இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சில்வாவை 31 ரன்களில் கரேத் டெலானி வெளியேற்றினார். இதையடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா குஷல் மெண்டீஸூடன் கைகோத்து அயர்லாந்து வீரர்களின் பந்துகளை சிதறடித்தார். இதையடுத்து 15 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 1 விக்கெட் இழப்புடன் அசால்ட்டாக அடைந்து வெற்றி பெற்றது இலங்கை. குஷல் மெண்டீஸ் 68 ரன்களுடனும், அசலங்கா 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அயர்லாந்து தரப்பில் கரேத் டெலானி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT