ஆரோன் ஃபின்ச் | கோப்புப்படம் 
விளையாட்டு

T20 WC | ஆஸி.யின் பேக்-அப் விக்கெட் கீப்பர் யார்? - ஃபின்ச் சுவாரஸ்ய தகவல்

செய்திப்பிரிவு

நடப்பு டி20 உலகக் கோப்பையில் தங்கள் அணியின் மாற்று விக்கெட் கீப்பர் யார் என்பதை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச். அவர் பரிந்துரைத்துள்ள வீரரின் பெயரை கேட்டால் இவரா என ஆச்சரியம் அடைய வாய்ப்புகள் உள்ளன.

உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஸ் காயம் அடைந்தார். அவருக்கு மாற்றாக ஆல்-ரவுண்டரான கேமரூன் கிரீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதையடுத்து, ஆஸ்திரேலிய அணி மாற்று விக்கெட் கீப்பர் இல்லாமல் பெரிய ரிஸ்க் எடுத்துள்ளதாக சொல்லப்பட்டது.

அந்த அணியின் பிரதான விக்கெட் கீப்பரான மேத்யூ வேட், விளையாடாத பட்சத்தில் அவருக்கு மாற்றாக யார் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார்கள் என்பதை ஃபின்ச் பகிர்ந்துள்ளார்.

“அது டேவிட் வார்னராக இருக்கலாம். அவர் நேற்று பயிற்சி மேற்கொண்டிருந்தார். அது நானாக கூட இருக்கலாம். ஆனால், இதற்கு முன்னர் கேப்டன்சி மற்றும் விக்கெட் கீப்பிங் பணியை நான் ஒரே நேரத்தில் கவனித்தது இல்லை. அதனால் அது சவாலாக இருக்கும். மிட்செல் ஸ்டார்க் கூட தொடக்கத்தில் சில ஓவர்களை வீசிவிட்டு இடையில் கிளவுஸ் அணிந்து விக்கெட் கீப்பிங் பணியை கவனிக்கலாம். இப்போதைக்கு இது நாங்கள் எடுத்துள்ள ரிஸ்க்தான். அதை நாங்கள் அறிவோம். ஆனால், கேமரூன் கிரீனின் வரவு அணிக்கு நல்ல பேலன்ஸை கொடுத்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

நாளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT