மெல்பர்ன்: விராட் கோலியின் மகத்தான அனுபவம், அழுத்தமான சூழ்நிலைகளை கையாள்வதற்கு பெரிதும் உதவியாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரிஷப் பந்த் மேலும் கூறியதாவது: அழுத்தமான சூழ்நிலைகளை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்பதை விராட்கோலி கற்றுக்கொடுப்பார். இது கிரிக்கெட் பயணத்தில் நமக்கு உதவுக்கூடும். எனவே அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது எப்போதுமே சிறப்பானதாக இருக்கும்.
அதிக அனுபவமுள்ள ஒருவர் உங்களுடன் இணைந்து பேட்டிங் செய்வது நல்லது. ஏனென்றால் ஆட்டத்தை எப்படி எடுத்துச் செல்வது, ரன் ரேட் அழுத்தத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதை அவர் உங்களுக்கு எடுத்துக் கூற முடியும். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சிறப்பானது, ஏனெனில் அந்த போட்டியை சுற்றி எப்போதும் பரபரப்பு காணப்படும்.
எங்களுக்கு மட்டுமல்ல,ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நிறைய உணர்ச்சிகள் உள்ளன. இது ஒரு வித்தியாசமான உணர்வு, நீங்கள் களத்திற்குச் செல்லும்போதும், நீங்கள் களத்தில் இறங்கும்போதும் மக்கள் ஆரவாரம் செய்வதை பார்க்க முடியும். அது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. நாங்கள் தேசிய கீதம் பாடும்போது, உண்மையிலேயே எனக்கு மெய்சிலிர்க்கும். இவ்வாறு ரிஷப் பந்த் கூறினார்.