மெல்பர்ன்: வரும் ஞாயிறு அன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இரு அணிகளுக்கும் இதுதான் இந்தத் தொடரின் முதல் போட்டியும் கூட. இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வரும் போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன. அதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்கு எப்போதுமே அதீத எதிர்பார்ப்பு இருக்கும்.
வழக்கம் போலவே இந்தப் போட்டிக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் புரோமோக்களும் வலம் வந்து கொண்டுள்ளன. இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதி உள்ளன. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.
இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்த கடைசி 3 டி20 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது பாகிஸ்தான். அது அந்த அணிக்கு சில நம்பிக்கையை மனதளவில் கொடுக்கும். இருந்தாலும் இந்தப் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்த வாய்ப்பு மிகுந்திருப்பதற்கான 3 காரணங்களைப் பார்ப்போம்..
சூர்யகுமார் யாதவ்: இந்திய அணியின் துருப்புச் சீட்டு என்றால் அது சூர்யகுமார் யாதவ் எனச் சொல்லலாம். நடப்பு ஆண்டில் அற்புதமான ஃபார்மில் ஆடி வருகிறார். அயர்லாந்து, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், அமீரகம், இந்தியா, இப்போது ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளின் ஆடுகளங்களில் தனது ஃபார்மை விடாது கெட்டியாக கேரி செய்து வருகிறார்.
நடப்பு ஆண்டில் 23 டி20 போட்டிகளில் விளையாடி 801 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 1 சதம் மற்றும் 6 அரைசதம் அடங்கும். இவரது ஸ்ட்ரைக் ரேட் 184.56. பல்வேறு விதமான ஷாட்களை ஆடும் திறன் கொண்டவர். நிச்சயம் இவர் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் பங்களிப்பு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
விராட் கோலி: கிரிக்கெட் பந்தை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் விராட் கோலி, சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆசிய கோப்பையில் அரைசதம் பதிவு செய்திருந்தார் கோலி. அது நிச்சயம் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு நம்பிக்கை கொடுக்கும். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அபாரமாக கோலி பேட் செய்வார். அதையெல்லாம் கூட்டிக் கழித்து பார்த்தால் நிச்சயம் கோலி இந்தப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அது தவிர பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை தொடரில் தரமான ரெக்கார்டுகளை கொண்டுள்ளார் கோலி. அதேபோல ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் பின்வரிசையில் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்ய வாய்ப்புகள் அதிகம்.
பலவீனமான பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர்: பாகிஸ்தான் அணி அதன் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானையும் பெரிய அளவில் நம்பி உள்ளது. அவர்கள் ரன் சேர்க்க தவறினால் அந்த அணி தடுமாறும். ஹைதர் அலி, இப்திகார் அகமது, ஆசிஃப் அலி போன்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிப்பதில்லை. அதனால் இந்திய அணி அதை டார்கெட் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த வரிசையில் முகமது நவாஸ் கொஞ்சம் ஆறுதல் கொடுப்பார். அதனால் இந்திய அணிக்கு பாபர், ரிஸ்வான் மற்றும் நவாஸ் விக்கெட்டுகள் ரொம்பவே முக்கியம். அந்த விக்கெட்டுகளை எளிதில் கைப்பற்றிவிட்டால் அணிக்கு சக்ஸஸ் தான்.