நடப்பு சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக பம்பரமாக சுழன்று ரன் குவித்து வருகிறார் புஜாரா. அவர் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் கடைசி 3 போட்டிகளில் மட்டும் 62 ரன்கள் (35 பந்துகள்), 38 (27) மற்றும் 57 (38) குவித்துள்ளார். இந்த சாம்பியன்ஷிப் தொடர் டி20 ஃபார்மெட்டில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதோடு இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இவரது பேட்டிங் மிகவும் நேர்த்தியாக இருக்கும். களத்தில் சாலிடாக நிலைத்து நின்று, நிதானமாக ஆடும் பேட்ஸ்மேனாக இவர் அறியப்படுகிறார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக இவரது ஆட்டம் அதிரடியான பாணியில் உள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ளூர் அளவில் நடைபெறும் ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் சசெக்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 111.62. இப்போது அதை அப்படியே இந்திய அளவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்தாக் அலி கோப்பையிலும் தொடர்ந்து வருகிறார்.
இமாச்சல பிரதேச அணிக்கு எதிராக 38 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். குஜராத் அணிக்கு எதிராக 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். நாகாலாந்து அணிக்கு எதிராக 35 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். 4 போட்டிகளில் மொத்தம் 118 பந்துகளை எதிர்கொண்டு 171 ரன்கள் எடுத்துள்ளார். 21 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் இதில் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 144.91. சராசரி 42.75. அவருக்கு தற்போது 34 வயதாகிறது.