காபா மைதானம் 
விளையாட்டு

T20 WC | விளையாடியது மழை - இந்தியா Vs நியூஸிலாந்து பயிற்சிப் போட்டி ரத்து

செய்திப்பிரிவு

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான வார்ம்-அப் போட்டி மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது.

ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கி உள்ளது. இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி மற்றும் இறுதி என மொத்தம் 45 போட்டிகள் இதில் அடங்கும். வரும் ஞாயிறு (அக்.23) அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இரு அணிகளுக்கும் இந்த தொடரின் முதல் போட்டி இதுதான்.

முன்னதாக, இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணிக்கு இரண்டு வார்ம்-அப் போட்டிகள் திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் முதல் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்தது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், நியூஸிலாந்து அணிக்கு எதிராக இன்று மற்றொரு போட்டி நடைபெற இருந்தது. அது தான் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

காலை இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வார்ம்-அப் போட்டியில் விளையாடின. அந்த ஆட்டத்தில் ஆப்கன் அணி 20 ஓவர்கள் பேட் செய்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. அந்த இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. அந்த அணி 2.2 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதில் முடிவு ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியா - நியூஸிலாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது ஒரு வகையில் நல்லது என்ற பேச்சு உள்ளது. ஏனெனில், இந்தப் போட்டி நடத்தப்பட்டு இருந்தால் களத்தில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக ஃபீல்டிங் செய்யும் போது வீரர்கள் காயம் பட வாய்ப்பு உள்ளது. இந்திய அணியில் ஏற்கனவே காயம் காரணமாக பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம் பெறவில்லை.

SCROLL FOR NEXT