விருதை பெற்றுக் கொண்டு பேசும் பென்சிமா. (படம்: பிரான்ஸ் ஃபுட்பால்) 
விளையாட்டு

Ballon d'Or விருதை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா!

செய்திப்பிரிவு

பாரிஸ்: நடப்பு ஆண்டுக்கான Ballon d'Or விருதை வென்ற பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா, இந்த விருதை மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விருதை வென்ற மூத்த வயது வீரர்களில் ஒருவராக அவர் உள்ளார். வரும் டிசம்பர் மாதம் அவர் 35 வயதை நிறைவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகிறார். அதிகபட்சமாக மெஸ்ஸி இந்த விருதை 7 முறை வென்றுள்ளார். ரொனால்டோ 20 முறை இந்த விருதை வெல்வதற்கான பரிந்துரையில் இடம் பெற்றுள்ளார். அவர் 5 முறை இந்த விருதை வென்றுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான விருதை வெல்லும் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் ஆடவர் பிரிவில் மொத்தம் 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். அதில் பென்சிமா, லெவோண்டஸ்கி, கெவின் டி ப்ரூய்ன், முகமது சாலா ஆகிய வீரர்கள் விருதை வெல்லும் பேவரைட் வரிசையில் இருந்தனர்.

எதிர்பார்த்ததைப் போலவே பென்சிமா விருதை வென்றுள்ளார். “இந்த விருதை வெல்ல வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது உண்டு. ஆனால் 30 வயதை கடந்த பிறகு அது லட்சியமாக மாறியது. அதை எனது தலைக்குள் ஏற்றிக் கொண்டேன். நான் சொல்லும் லட்சியம் கடினமாக உழைப்பது. எனது அணிக்கு தலைவனாக இருப்பதிலும், ரியல் மாட்ரிட் அணியில் விளையாடுவதும் நான் பெற்ற பாக்கியம். கடினமான தருணங்களை கடந்து வந்துள்ளேன். என்னோடு கிளப் அணியில் விளையாடும் வீரரர்கள், அவர்களது நாட்டுக்காகவும் விளையாடி வந்தனர். ஆனால் நானோ அந்நேரத்தில் கிளப் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். களத்தில் எனது உழைப்பை எண்ணி மகிழ்கிறேன், பெருமை கொள்கிறேன்” என விருதை பெற்றுக் கொண்ட பென்சிமா தெரிவித்திருந்தார்.

கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி, சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லீகா தொடர்களை வென்றது. அந்த அணிக்காக விளையாடிய அவர் 46 ஆட்டங்களில் 44 கோல்களை பதிவு செய்திருந்தார். அதற்காகவே இந்த விருதை அவர் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT