மும்பையில் பள்ளி மாணவர்களுடன் உரையாடல் மேற்கொண்ட சச்சின் டெண்டுல்கர், மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் பெர்த்தில் அடித்த சதம் தன் கிரிக்கெட் வாழ்வை மாற்றியமைத்ததாகத் தெரிவித்தார்.
1992ஆம் ஆண்டு வேகப்பந்து வீச்சிற்கு பயங்கரமாக உதவி புரிந்த பெர்த் ஆட்டக்களத்தில் சச்சின் டெண்டுல்கர் 114 ரன்களை அடித்தார். மற்ற பேட்ஸ்மென்கள் நிற்கத் தவறிய பிட்சில் சச்சின் அனாயசமாக ஒரு சதத்தை அடித்தது உலக கிரிக்கெட் நிபுணர்களின் கவனத்தை ஈர்த்தது.
"பெர்த் மைதானத்தில் 1992ஆம் ஆண்டு அடித்த அந்த ஒரு சதம் எனது கிரிக்கெட் வாழ்வைப் புரட்டிப் போட்டது. அந்தத் தருணத்தில் பெர்த் பிட்ச்சில் பந்துகள் அதிகம் எகிறும், அதிலும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் ஆக்ரோஷத்தை எளிதில் கையாள முடியாது. அப்போது எனது 19வது வயதில் அந்தச் சதம் கைகூடியது.
இதற்கு 2 போட்டிகளுக்கு முன்பு சிட்னியில் ஒரு சதம் எடுத்தேன், ஆனால் இரண்டு பிட்ச்களும் முற்றிலும் வேறுவேறு. ஆனால் அப்போது கூட பெர்த் போன்ற பிட்ச் உலகில் எங்கும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை, அங்கு சதம் ஒன்றை எடுத்து விட்டால் அதன் பிறகு உலகின் எந்தப் பிட்சிலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்பது எனக்கு தெரிந்திருந்தது.
அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எனது கிரிக்கெட் வாழ்வு தொடங்கியிருந்தது. சில நல்ல இன்னிங்ஸ்களை ஆடியிருந்தாலும் பெர்த் சதம் என்னால் மறக்க முடியாத ஒன்று.
அதற்கான நான் அதீத தன்னம்பிக்கையுடன் இருந்தேன் என்று அர்த்தமல்ல, அதன் பிறகே எந்தச் சவாலையும் முறியடிக்கும் தன்னம்பிக்கை பிறந்தது” என்று கூறினார் சச்சின் டெண்டுல்கர்.
மும்பையில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சச்சின், மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.