பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ பந்து வீச்சாளரான முகமது ஷமி, நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் வார்ம்-அப் போட்டியில் ஒரே ஒரு ஓவர் வீசி ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். அவரது அந்த ஆறு பந்துகள் இந்திய அணிக்கு வெற்றியை அறுவடை செய்து கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அந்த அணியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து, அதை அப்படியே இந்திய அணியின் பக்கமாக பறித்துக் கொண்டு வந்து விட்டார் ஷமி.
கரோனா தொற்று, கடந்த ஓராண்டு காலமாக சர்வதேச டி20 தொடருக்கான அணியில் மறுக்கப்பட்ட வாய்ப்பு என பல தடைகளை கடந்து இந்த ஸ்பெல்லை அவர் வீசியிருந்தார். கிட்டத்தட்ட டைட்டானிக் படத்தில் அதன் நாயகன் ஜேக் டாசன், கடைசி நேரத்தில் கப்பலை பிடித்திருப்பார். அது போல தான் கடைசி நேரத்தில் உலகக் கோப்பை தொடருக்கான விமானத்தை பிடித்தார் ஷமி. இதோ தனது அனுபவத்தையும், தான் கற்று வைத்துள்ள மொத்த வித்தையையும் முதல் போட்டியில் இறக்கிவிட்டார்.
“கடின உழைப்பு, நிறைய மெனக்கெடல், அர்ப்பணிப்பு ஆகியவை நான் மீண்டு வர தேவைப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கான இந்த பயணம் பலன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பதை விட வேறென்ன சிறந்த உணர்வு இருந்துவிட முடியும். உலகக் கோப்பையை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன்” என ஆஸி. உடனான போட்டி முன்னர் ஷமி ட்வீட் செய்திருந்தார்.