விளையாட்டு

T20 WC | பாக். அணிக்கு எதிராக விளையாடும் வீரர்களை முடிவு செய்துவிட்டேன் - இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தகவல்

செய்திப்பிரிவு

மெல்பர்ன்: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

கடைசி நிமிட முடிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அணித் தேர்வு குறித்து வீரர்களுக்கு முன்பே தெரியப்படுத்த விரும்புகிறோம், இதனால் போட்டிக்கு அவர்கள் முன்கூட்டியே தயாராகலாம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கான விளையாடும் லெவன் என்னிடம் ஏற்கெனவே உள்ளது. அதில் உள்ள வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிட யோசனைகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

வீரர்கள் சிறந்த முறையில் தயாராக விரும்புகிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் ஒவ்வொரு முறையும் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அச்சமில்லாத அணுகுமுறையை பின்பற்ற பார்க்கிறோம்.

கடைசி நிமிட தகவலை நாங்கள் நம்பவில்லை, கடைசி நிமிடத்தில் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று யாரிடமாவது சொல்வதை நான் நம்ப விரும்பவில்லை. சூர்யகுமார் யாதவ் சிறந்த காரணியாக இருப்பார். அவருடயை சிறந்த பேட்டிங் பார்மை தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

SCROLL FOR NEXT