விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: முரளி விஜய், புவனேஷ்வர் குமார் சாதனை

செய்திப்பிரிவு

இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய தொடக்க வீரர்கள் பட்டியலில் முரளி விஜய் 4-வது இடத்தைப் பிடித்தார்.

இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ள அவர் 317 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 79.25. கவாஸ்கர் 4 டெஸ்ட் போட்டிகளில் 542 ரன்கள் எடுத்து முதல் இடத்திலும், ரவிசாஸ்திரி 3 டெஸ்ட் போட்டிகளில் 336 ரன்கள் எடுத்து 2-வது இடத்திலும், ராகுல் திராவிட் 3 டெஸ்ட் போட்டிகளில் 318 ரன்கள் எடுத்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணி இங்கிலாந்தில் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதிலும்முரளி விஜய் சிறப்பாக பேட்டிங் செய்தார். கவாஸ்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து மண்ணில் 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 2 டெஸ்ட் போட்டிகளில் 3 அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் 58 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 36 ரன்கள் எடுத்தாலும், 2-வது இன்னிங்ஸில் இக்கட்டான சூழ்நிலையில் 52 ரன்கள் எடுத்தார்.

ஆல்ரவுண்டராக புவனேஷ்வர்

இந்த டெஸ்ட் தொடர் மூலம் இந்திய அணியின் புதிய ஆல் ரவுண்டராகவும் புவனேஸ்வர் குமார் உருவாகியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய அவர், 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மட்டும் 6 விக்கெட் எடுத்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் கூட இந்தியா ஒரு இன்னிங்ஸில் மட்டுமே பந்து வீசியது, 2-வது இன்னிங்ஸில் பந்து வீச வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு முன்பாகவே போட்டி டிராவில் முடிந்துவிட்டது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய புவனேஷ்வர் குமார். இப்போது விளையாடியுள்ளது 8-வது டெஸ்ட் போட்டியாகும். இதற்கு முன்பு இந்தியாவில் மட்டுமே 6 டெஸ்ட்களில் அவர் களமிறங்கியுள்ளார்.

இப்போது முதல்முறையாக அந்நிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தனது முத்திரையை பதித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் முரளி விஜய்க்கு அடுத்தபடியாக தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT