விளையாட்டு

ட்விட்டரில் டிரெண்டான ‘#ArrestKohli’... - காரணம் இதுதான்

செய்திப்பிரிவு

சென்னை: ட்விட்டரில் '#ArrestKohli' என்ற ஹேஷ்டேக் இன்று காலை முதல் டிரெண்டிங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காரணாம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு கொலை.

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பி விக்னேஷ் மற்றும் எஸ் தர்மராஜ். இருவரும் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகர்கள். ஐடிஐ முடித்துள்ள விக்னேஷ், சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்வதற்காக விசாவுக்காக காத்திருந்த நிலையில், நேற்று தங்கள் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டைக்கு அருகில் தனது நண்பர் தர்மராஜ் உடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது இருவருமே கிரிக்கெட் தொடர்பாக பேசியுள்ளனர்.

விக்னேஷ் ரோஹித் சர்மாவின் தீவிர ரசிகர். அதேநேரம் தர்மராஜ் விராட் கோலியின் தீவிர ரசிகர். அதனடிப்படையில் மது அருந்திக்கொண்டு ஐபிஎல் தொடர்பாக பேசியுள்ளனர். மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவாக விக்னேஷும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூவுக்கு ஆதரவாக தர்மராஜூம் பேசியுள்ளனர். விவாதத்தின் போது, ​​விக்னேஷ் ஆர்சிபி அணியையும் விராட் கோலியையும் கேலி செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தர்மராஜை உடல்ரீதியாகவும் விக்னேஷ் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் கோபமடைந்த தர்மராஜ், விக்னேஷை பாட்டிலால் தாக்கியதுடன், கிரிக்கெட் மட்டையாலும் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்தே '#ArrestKohli' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியது. பலர் இந்தச் சம்பவம் குறித்த பேசிய நேரத்தில் பலர் காமெடியாக மீம்களை பதிவிட்டனர்.

அதேநேரம், "இந்த விஷயத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஏன் இழுக்கப்படுகிறார்கள்?அவர்கள் என்ன செய்தார்கள்? இது இரு தரப்பிலும் அறிவற்று இரண்டு ஆதரவாளர்கள் இடையே நடந்த விஷயம் இது. இன்றைய இளைஞர்களுக்கு விளையாட்டை எப்படி ரசிப்பது என்று தெரியவில்லை. இவற்றில் கிரிக்கெட் வீரர்களை தேவையில்லாமல் சேர்ப்பது முற்றிலும் நியாயமற்றது மற்றும் முற்றிலும் முட்டாள்தனமானது" என்பது போன்ற கருத்துக்களும் கவனம் ஈர்த்தன.

SCROLL FOR NEXT