டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன் மிகவும் அவசியம் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது:
இந்திய அணியில் நடுவரிசை பேட்ஸ்மேன்களில் இடதுகை பேட்ஸ்மேன்களின் பங்களிப்புமிகவும் முக்கியம். இந்திய அணியில் முதல் 6 பேட்ஸ்மேன்களில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லை. ஆனால், எதிரணியில் கண்டிப்பாக 2 அல்லது 3 பேர் இடதுகை பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.
இந்திய அணியில் 2007-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் கவுதம் கம்பீர், யுவராஜ்சிங் மற்றும் என்னைப் போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தோம். அதேபோல ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பந்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.
ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து விளையாடக்கூடிய வகையில் ரிஷப் பந்த் சிறந்த காரணியாக இருப்பார். தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பந்த்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.
யுவராஜ் சிங்கும் நானும் விளையாடும்போது எதிரணியினரை பயமுறுத்துவோம்.இப்போது ராகுல், ரோஹித் அதை எப்படிச் செய்யவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும். அவர்கள் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற வேண்டும்.
இடது, வலது கை பேட்ஸ்மேன்கள் கலவையானது பந்து வீச்சின் ஸ்ருதியை சீர்குலைக்கும். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் பெரிய ஆடுகளங்கள் இருக்கும். நடுவரிசையில் இடது கை பேட்ஸ்மேனை வைத்திருப்பது மிகவும் முக்கியம். ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். தொடரை வெல்லவும் உதவியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.