வீழ்ச்சியிலிருந்து ஆஸ்திரேலியா அணியை உச்சத்திற்குக் கொண்டு சென்ற கேப்டன் மைக்கேல் கிளார்க், தன் கேப்டன்சி வாழ்நாளில் இந்தியாவில் விளையாடிய அந்தத் தொடர்தான் மிகக் கடினமானது என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி தழுவியது ஆஸ்திரேலிய அணி. அதோடு மட்டுமல்லாமல், 4 வீரர்களை இவரும் பயிற்சியாளர் ஆர்தரும் சேர்ந்து அணியிலிருந்து நீக்கிய சர்ச்சையும் கூட சேர்ந்து கொண்டது.மிட்செல் ஜான்சன், உஸ்மான் கவாஜா, ஷேன் வாட்சன், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகிய 4 வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது ஓய்வில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், இந்தியத் தொடரில் நடந்த விவகாரங்களை அசை போடுகிறார்:
"என்னுடைய கேப்டன்சி வாழ்வில் இந்தியாவில் விளையாடிய தொடர்தான் மிகக் கடினமானது. அந்த 4 வீரர்கள் நீக்கப்படும் நிகழ்வுக்கு முன்னர் நிறைய நடந்தது. அதுவும் நீண்ட நாட்களாக நடந்து வந்தது. இது ஏதோ திடீரென நிகழ்ந்ததல்ல. மிக்கி ஆர்தர் ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். நான் ஒத்துழைத்தேன், இப்போது யோசித்தால் அந்த முடிவு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு அனுகூலமாகவே உள்ளது என்றே நான் கருதுகிறேன்.
அனைத்தையும் விட அந்தத் தொடரில் தோற்றபிறகு இந்தியாவுக்குச் சென்ற ஆஸி.அணிகளில் மோசமான அணி எனது அணி என்று வர்ணிக்கப்பட்டது எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
ஒரு மிகச்சிறந்த அணியுடன் நான் இருக்கிறேன் என்று நினைக்கும்போது மற்றவர்கள் அந்தச் சிந்தனையில் இல்லை என்றால் தண்டனை அளிப்பது தவிர வேறு வழியில்லை.
இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. இன்னமும் கூட ஒரு அணியாக சிறந்ததாக ஆஸ்திரேலியா விளங்குகிறது என்று என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. இந்தக் கோடையில் இந்தியா இங்கு வருகிறது, மிகவும் கடினமான ஒரு டெஸ்ட் அணி இந்தியா. அதன் பிறகு இங்கிலாந்துக்குச் செல்கிறோம், ஆகவே நிறைய கடினமான தொடர்கள் இன்னமும் உள்ளது.
எனது பேட்டிங்கிலும் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. எனது ஆட்டம் மங்கத் தொடங்கும்போது நான் தேர்ந்தெடுத்த இந்த ஆட்டத்திலிருந்து விடைபெறுவேன்"
இவ்வாறு கூறியுள்ளார் கிளார்க்.