விளையாட்டு

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் பாட்மிண்டன் அகாடமி தொடங்கப்படும்: அன்புமணி ராமதாஸ் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்னும் 3 ஆண்டுகளில் நவீன வசதிகளுடன் கூடிய பாட்மிண்டன் அகாடமி தொடங்கப்படும் என தமிழ்நாடு பாட்மிண்டன் சங்க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கத்தின் உறுப்பினரான சென்னை மாவட்ட பாட்மிண்டன் சங்கத்தின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா அடையாறில் உள்ள காந்திநகர் கிளப்பில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கத்தின் தலைவரான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம் பாட்மிண்டன் விளை யாட்டில் சிறந்து விளங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேசிய ரேங்கிங் போட்டியில் சென்னை யைச் சேர்ந்த சங்கர் முத்துசாமியும், மதுரையைச் சேர்ந்த வர்ஷினியும் பட்டம் வென்று சாதனை படைத் துள்ளனர். பாட்மிண்டன் விளை யாட்டில் தமிழகத்தில் இருந்து ரேங்கிங் பட்டம் வென்றுள்ள முதல் சென்னை வீரர் என்ற பெருமையை சங்கர் முத்துசாமி பெற்றுள்ளார்.

இளம் வீரர்கள் பலர் உருவாகி தேசிய அளவில் முத்திரை பதித்து வருகிறார்கள். இவர்கள் தேசிய அளவில் சாதனைகள் படைப்ப தோடு நின்றுவிடாமல் ஆல் இங்கிலாந்து போட்டி, ஒலிம்பிக் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளிலும் வென்று சாதனைகள் படைக்க வேண்டும்.

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு மிகவும் பிரபலம் அடைந்து வரும் பாட்மிண்டன் விளையாட்டை தமிழகத்தில் மேலும் ஊக்குவிக்க இன்னும் 3 ஆண்டுகளில் நவீன வசதிகளுடன் கூடிய அகாடமி தொடங்கப்படும். இது வீரர், வீராங்கனைகளுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை மாவட்ட பாட் மிண்டன் சங்கத்தின் சார்பில் முதன் முறையாக விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த ஆண்டின் சிறந்த வீரராக சங்கர் முத்துசாமியும், வளரும் வீரராக கவின் தங்கம், வீராங்கனையாக அக் ஷயா, நம்பிக்கை நட்சத்திரமாக ரித்விக், பயிற்சியாளராக ஜெர்ரி மார்டின் ஆகியோர் விருதுகள் பெற்றனர். இவர்களுக்கு விருதுடன் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இதுதவிர சித்தாந்த் குப்தா, கெவின் வால்டர், வ்தசவ் துவாரி, அருண்குமார், நசீர்கான், கரண் ராஜன், வேலவன், கவின் தங்கம், பிரணவி, ரம்யா துளசி உள்ளிட்ட 17 பேருக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட பாட்மிண்டன் சங்க செயலாளர் அரவிந்தன், துணை தலைவர் ராஜராஜன், பொருளாளர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT