மும்பை: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயம் அடைந்த பும்ராவுக்கு மாற்றாக முகமது ஷமியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இதனை இந்திய கிரிக்கெட் சீனியர் தேர்வு கமிட்டி குழு முடிவு செய்துள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இடம்பிடித்திருந்த பும்ரா காயம் காரணமாக விலகினார். 15 பேர் அடங்கிய வீரர்களோடு ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சூழலில் பும்ரா தவிர்த்து 14 வீரர்களுடன் கடந்த வாரம் ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி.
அவருக்கு மாற்று வீரர் யார் என்ற கேள்வி எழுந்திருந்தது. எப்படியும் ஷமி தான் அது என்ற கணிப்புகள் ஒரு பக்கம் இருந்தது. அது இப்போது நிஜமாகி உள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற உள்ள வார்ம் அப் போட்டிகளுக்கு முன்னர் அவர் இந்திய அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷமி: 17 சர்வதேச டி20 போட்டிகளில் தான் விளையாடி உள்ளார் ஷமி. நடப்பு ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் உள்ளது. அவர் கடைசியாக சர்வதேச டி20 போட்டியில் விளையாடியது கடந்த 2021 நவம்பரில். அதன் பிறகு அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அவரால் கரோனா தொற்று காரணமாக விளையாட முடியவில்லை. அனுபவ வீரர் என்ற முறையில் அவர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஸ்வின், சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.