சச்சின் டெண்டுல்கரை போல விளையாட விரும்பியதாகவும். ஆனால் அது முடியாது என பின்னர் உணர்ந்ததாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளது.
90-களில் கிரிக்கெட் என்றதும் பலருக்கும் சச்சின் டெண்டுல்கரின் பெயர்தான் சட்டென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். சச்சின் அவுட் என்றால் இந்தியா ஆட்டத்தை இழந்தது என்ற எண்ணத்தில் டிவியை ஆஃப் செய்தவர்களும் உண்டு. 90-களில் கிரிக்கெட் கனவுடன் வளர்ந்து வந்த டீன்-ஏஜ் பிள்ளையான மகேந்திர சிங் தோனிக்கும் சச்சின்தான் ரோல் மாடல்.
“கிரிக்கெட் களத்தில் என்னுடைய ரோல் மாடல் யார் என்றால் அது எப்போதும் சச்சின்தான். நானும் உங்களைப் போலவே அவரது ரசிகன். சச்சின் விளையாடுவதைப் பார்த்து வளர்ந்தவன். அவரைப் போலவே பேட் செய்யவும் விரும்பினேன். பின்னர்தான் தெரிந்தது என்னால் அவரை போல பேட் செய்ய முடியாது என்று. ஆனால் சச்சினைப் போல விளையாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உள்ளது” என தோனி தெரிவித்துள்ளார்.
பள்ளியில் தனது ஃபேவரைட் பாடம் விளையாட்டுதான் என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியை துவக்கி வைத்தபோதுதான் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களை பதிவு செய்தபோது மறுமுனையில் அவருடன் விளையாடியவர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.