ஹாமில்டனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 369 ரன்களை இலக்காக நியூஸிலாந்து அணி நிர்ணயித்தது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 271 ரன்களும், பாகிஸ்தான் 216 ரன்களும் எடுத்தன.
55 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி திங்களன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் 85.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
132 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 16-வது சதம் விளாசிய ராஸ் டெய்லர் 102, வாட்லிங் 80 ரன்களுடனும் நியூஸிலாந்து வலுவான நிலைக்குச் சென்றது.. ராஸ் டெய்லர் கடந்த 11 இன்னிங்ஸ்களில் அரை சதத்தை கூட எட்டாத நிலையில் தற்போது சதம் அடித்து அசத்தியுள்ளார். மிட் ஆன், மிட் ஆஃபில் மொத்தம் 3 ஷாட்களையே ஆடினார். இதனால் பாகிஸ்தான் அவருக்கு வீசிய லைன் மற்றும் லெந்த் டெய்லருக்கு வசதியாக இருந்தது என்றே கூற வேண்டும். பிட்சும் பேட்டிங் சாதக ஆட்டக்களமாக தற்போது எளிதடைந்துள்ளது. முதல் 2 நாட்கள் இருந்த ஸ்விங் இன்று இல்லை.
லேதம், வில்லியன்சன் (42) கூட்டணி 96 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த பிறகு டெய்லர் களமிறங்கினார். 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்ட டெய்லர் அதன் பிறகு 52 பந்துகளில் மேலும் 9 பவுண்டரிகளுடன் 102 நாட் அவுட் என்று அதிரடி காட்டினார். கட், கிளான்ஸ் என்று அவர் விக்கெட்டின் இருபுறமும் சாத்தினார்.
இன்று காலை பாகிஸ்தான் 4 மெய்டன்களுடன் தொடங்கியது, தொடக்க வீரர் ஜீத் ராவலை வீழ்த்தியது, ஆனால் அதன் பிறகு நியூஸிலாந்து ரன்களை கட்டுப்படுத்த தவறியது பாகிஸ்தான் பந்து வீச்சு. கொலின் டி கிராண்ட்ஹோம் 21 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். கேன் வில்லியன்சன் 42 ரன்களிலும், நிகோல்ஸ் 26 ரன்களிலும் இம்ரானிடம் வீழ்ந்தனர். கடைசியில் வாட்லிங் 15 ரன்களுடனும் டெய்லர் 102 ரன்களுடனும் இருந்த போது 313/5 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது நியூஸிலாந்து.
369 ரன்கள் வெற்றி இலக்குடன் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 3 ஓவர்களில் 1 ரன் எடுத்துள்ளது. நாளை 5-ம் நாள் பாகிஸ்தான் வெற்றிக்கு ஆடுமா அல்லது டிரா செய்யுமா? அல்லது நியூசிலாந்து தொடரை வெல்லுமா என்பதைப் பார்க்க வேண்டும்.