விளையாட்டு

ஆஸி. ஆடுகளங்கள் சூர்யகுமாரின் 360 டிகிரி ஆட்டத்துக்கு ஏற்றவை - டேல் ஸ்டெய்ன் கருத்து

செய்திப்பிரிவு

மும்பை: ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உள்ள வேகமும், பவுன்ஸும் சூர்யகுமார் யாதவின் 360 டிகிரி ஆட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற இருதரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் ஹாட்ரிக் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். அவரது பார்ம், டி 20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்திலும் தொடர்ந்தது. மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில், 53 ரன்கள் விளாசினார்.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் கூறியதாவது:

சூர்யகுமார் யாதவ் அற்புதமான 360-டிகிரி வீரர், மேலும் எனக்கு அவர், டி வில்லியர்ஸை நினைவூட்டுகிறார். சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் டி வில்லியர்ஸாக இருக்கலாம். மேலும் அவர் தற்போது இருக்கும் அபரிமிதமான பார்ம் காரணமாக டி 20 உலகக் கோப்பையில் அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய வீரராக இருப்பார். சூர்யகுமார் யாதவ் பந்தின் வேகத்தைப் பயன்படுத்த விரும்பும் ஒரு வகையான வீரர். அவர், விக்கெட் கீப்பருக்கு பின்புறம் பந்தை விளாச விரும்புகிறார். பெர்த், மெல்பர்ன் உள்ளிட்ட ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஆடுகளங்களிலும் கொஞ்சம் கூடுதல் வேகம் இருக்கும்.

எனவே, நீங்கள் வேகத்தைப் பயன்படுத்தலாம். ஃபைன் லெக், பின்புறம் மற்றும் மைதானம் முழுவதும் பந்தை அடிக்கலாம். சூர்யகுமார் யாதவ் அசையாமல் நிற்கும்போதும், பின்னங்கால் நகர்வை பயன்படுத்தும் போதும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் சில அற்புதமான பின்னங்கால் கவர் டிரைவ்கள் மற்றும் சில அழகான கவர் டிரைவ்களை முன்னங்கால் நகர்வை கொண்டும் விளையாடியுள்ளார். எனவே, அவர் ஒரு ஆல்-ரவுண்ட்வீரர். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் மட்டை வீச்சுக்கு நன்கு கைகொடுக்கும்” என்றார். டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

SCROLL FOR NEXT