பிரதிநிதித்துவப் படம். 
விளையாட்டு

‘IND vs PAK-ல் கோலி 117... இந்தியா வெல்லும்...’ - போலி ஸ்கோர் கார்டும், நெட்டிசன்களின் வார்த்தைப் போரும்

செய்திப்பிரிவு

பெர்த்: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் முடிவு குறித்த போலியான ஸ்கோர் கார்டு ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் வேடிக்கையாக உள்ளது. அது ஒரு தரப்பு ரசிகர்களின் மனதை கொதிப்படையாவும், மற்றொரு தரப்பு ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையிலும் உள்ளது. அதனால் இருதரப்பும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் களத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய உள்ளனர். அந்த தருணம் அரங்கேறும் போது இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்து ரசிப்பார்கள். ஏனெனில் ஆட்டம் நொடிக்கு நொடி அனல் பறக்கும்.

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் வரும் 23-ம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளனர். இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டன. இத்தகைய சூழலில் இந்த போட்டியில் போலி ஸ்கோர் கார்டு ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி உள்ளது.

போலி ஸ்கோர் கார்டில் சொல்லப்பட்டுள்ளது என்ன? இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் எடுக்குமாம். இதில் விராட் கோலி 58 பந்துகளில் 117 ரன்கள் எடுப்பாராம். பாகிஸ்தான் அணி 171 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழக்குமாம். இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் தரமான வெற்றியை பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை அரங்கில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் தான் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது.

இந்த ஸ்கோர்கார்டு போலி தான் என ரசிகர்கள் நன்கு அறிந்துள்ளனர். இருந்தாலும் இருநாட்டு ரசிகர்களும் இதை வைத்து வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் தங்கள் நாட்டை அவர்கள் விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதால்தான். பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் நாட்டு அணி கடந்த ஆண்டு இந்தியாவை வீழ்த்திய டி20 உலகக் கோப்பை தொடரின் அசல் ஸ்கோர்கார்டை பகிர்ந்துள்ளனர்.

SCROLL FOR NEXT