புதுடெல்லி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. 100 ரன்கள் என்ற இலக்கை 19.1 ஓவர்களில் எட்டியது இந்தியா. இதன் மூலம் தொடரையும் வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்தப் பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என இரண்டு தொடர்களையும் அந்த அணி இழந்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்தது தென்னாப்பிரிக்கா. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன் சேர்க்கவில்லை. அதன் காரணமாக 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அந்த அணி. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. கேப்டன் தவான் மற்றும் சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 8 ரன்களிலும், இஷான் கிஷன் 10 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். ஷ்ரேயஸ் ஐயர், 23 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார்.
நிலைத்து நின்று விளையாடிய கில் 57 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் அரை சதத்தை மிஸ் செய்தார். சஞ்சு சாம்சன், 2 ரன்கள் எடுத்தார். முடிவில் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. இதன் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.