அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடந்து வரும் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மல்லர் கம்பம் விளையாட்டுப் பிரிவில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற ஹேமச்சந்திரன் என்ற வீரர் தங்கமும், சங்கீதா என்ற வீராங்கனை வெண்கலமும் வென்றுள்ளார். இருவரும் தனிநபர் பிரிவில் இந்தப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கியது. சுமார் 33 அணிகள் இதில் பங்கேற்றன. இதில் தமிழகமும் பங்கேற்றது. மொத்தம் 73 பத்தங்களை தமிழகம் வென்றுள்ளது. இதில் 25 தங்கம், 21 வெள்ளி மற்றும் 27 வெண்கலம் அடங்கும். இதில், பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்ப விளையாட்டும் இடம் பெற்றுள்ளது. இந்த விளையாட்டில் தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் மற்றும் 6 வீராங்கனைகள் என மொத்தம் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் ஆடவர் தனிநபர் ஹேங்கிங் பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன், 8.9 ஸ்கோரை பெற்று முதலிடம் பிடித்தார். இதே பிரிவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரர் ஒருவரும் 8.9 ஸ்கோரை எடுத்திருந்தார். இருவருக்கும் தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது. 8.75 புள்ளிகளை பெற்ற உத்தரப் பிரதேச வீரருக்கு வெண்கலம் கிடைத்தது. முன்னதாக, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டி, கேலோ இந்தியா மற்றும் தேசிய மல்லர் கம்பம் போட்டியில் ஹேமச்சந்திரன் இந்த ஆண்டு பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மகளிருக்கான தனிநபர் ரோப் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சங்கீதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மொத்தம் 9.05 ஸ்கோர் எடுத்திருந்தார் அவர். பதக்கம் வென்ற இருவருக்கும் அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் ஜனார்த்தனன் மற்றும் ஆதித்தன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.