டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ரஹ்கீம் கார்ன்வால் எனும் வீரர். அட்லாண்டா ஓபன் டி20 தொடரில் அவர் இதை பதிவு செய்துள்ளார். வெறும் 77 பந்துகளில் 205 ரன்களை அவர் குவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்க புள்ளிவிபரம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வரும் மோகன்தாஸ் மேனன் என்பவர் இதனை உறுதி செய்துள்ளார். “மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ரஹ்கீம் கார்ன்வால், 77 பந்துகளில் 205 ரன்கள் குவித்துள்ளார். அவரது இன்னிங்ஸில் 22 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 266.23. அமெர்க்காவில் நடைபெற்று வரும் அட்லாண்டா ஓபன் டி20 தொடரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார். அவர் அட்லாண்டா ஃபயர் அணிக்காக விளையாடி வருகிறார்” என மேனன் ட்வீட் செய்துள்ளார்.
அந்த போட்டியில் அவர் விளையாடிய அணி மொத்தம் 326 ரன்களை குவித்துள்ளது. இதனை ஸ்கொயர் டிரைவ் அணிக்கு எதிராக அவர் பதிவு செய்துள்ளார்.
ரஹ்கீம் கார்ன்வால், ஆண்டிகுவா பகுதியை சேர்ந்தவர். 29 வயதான அவர் இதுவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். உள்ளூர் அளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான ரெக்கார்டுகளை கொண்டுள்ளார் அவர். 6.6 அடி உயரம் கொண்ட அவர் வலது கை பேட்ஸ்மேன். ஆஃப் பிரேக் பந்து வீசுவதில் வல்லவராம்.