ஷோயப் அக்தர் | கோப்புப் படம் 
விளையாட்டு

T20 WC | பாகிஸ்தான் முதல் சுற்றோடு வெளியேறும் என அஞ்சுகிறேன்: ஷோயப் அக்தர்

செய்திப்பிரிவு

“எனக்கு என்னவோ இந்த பாகிஸ்தான் அணி எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றோடு வெளியேறி விடுமோ என அச்சமாக உள்ளது” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். அந்த அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த நாட்டில் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-4 என இழந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி இந்தத் தொடருக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இந்தத் தொடரின் முடிவு பாகிஸ்தானுக்கு சங்கடம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக, ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது பாகிஸ்தான்.

“எனக்கு என்னவோ இந்த பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு நடையை கட்டும் என தோன்றுகிறது. அதை எண்ணி நான் அஞ்சுகிறேன். அணியின் மிடில் ஆர்டர் சிறப்பானதாக இல்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ரன் சேர்க்க தவறினால் மிடில் ஆர்டர் ஒருவிதமான அழுத்தத்திற்கு சென்று விடுகிறது. கோப்பையை வெல்ல வேண்டும் என எண்ணும் அணி இப்படி செயல்படக் கூடாது. எனக்கு அதில் வருத்தம்தான். அணியில் சிக்கலே அதுதான். தேர்வுக்குழுவினர் அதை அறிந்தும் எந்த மாற்றமும் செய்யாதது அதிர்ச்சிதான்” என அக்தர் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இந்தியா போன்ற அணிகள் இடம்பெற்றுள்ள குரூப் பி-யில் தான் பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் தங்களது முதல் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய உள்ளனர். வரும் 23-ம் தேதி இந்தப் போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததாக தகவல்.

SCROLL FOR NEXT