சில்ஹெட்: நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் முதல் சுற்றில் மலேசியா அணிக்கு எதிராக இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி இது. முன்னதாக, இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
வங்கதேசத்தில் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் டி20 ஃபார்மெட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. மேகனா, 69 ரன்கள் குவித்தார். ஷெஃபாலி 46 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்களும் குவித்தனர்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மலேசிய அணி விரட்டியது. 5.2 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாளை இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து விளையாடுகிறது.