டேவிட் மில்லர் மற்றும் டிகாக். 
விளையாட்டு

IND vs SA 2-வது டி20 | சதம் விளாசி மிரட்டிய மில்லர்; துணை நின்ற டிகாக்: இந்திய அணி 16 ரன்களில் வெற்றி

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை இந்திய அணி 16 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இறுதி வரை வெற்றிக்காக போராடியது. அந்த அணி 221 ரன்கள் குவித்திருந்தது. டேவிட் மில்லர் இந்த போட்டியில் சதம் விளாசி இருந்தார். டிகாக் 69 ரன்கள் எடுத்திருந்தார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. குவாஹாட்டி நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) அன்று நடைபெற்ற இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 237 ரன்கள் குவித்தது.

238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அந்த அணி விரட்டியது. இரண்டு ஓவர்கள் முடிவில் வெறும் ஐந்து ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது. 7-வது ஓவரில் மார்க்ரம், 33 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதன்பிறகு 4-வது விக்கெட்டிற்கு இணைந்த டேவிட் மில்லர் மற்றும் டிகாக், 174 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணி 20 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

மில்லர், 46 பந்துகளில் சதம் பதிவு செய்திருந்தார். இந்திய அணியின் பவுலர்களில் அர்ஷ்தீப், ஹர்ஷல் மற்றும் அக்சர் என நான்கு ஓவர்கள் வீசி அதிக ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தனர்.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். ரோகித், 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் ராகுல், 24 பந்துகளில் அரை சதம் விளாசினார். அவர் 57 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் கோலியும், சூர்யகுமார் யாதவும் இணைந்து விளையாடினார். சூர்யகுமார் யாதவ், 18 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். இறுதி ஓவர்கள் நெருங்கிய நிலையில் கோலி தனது அதிரடியை தொடங்கினார். சூர்யகுமார் யாதவ், 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட்டானார். 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இருவரும் 102 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பின்னர் தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்தார். அவர் 7 பந்துகளில் 17 ரன்கள் குவித்தார். மறுபக்கம் கோலி 28 பந்துகளில் 49 ரன்களை குவித்திருந்தார்.

SCROLL FOR NEXT