குவாஹாட்டி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2-வது டி20 போட்டி அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட் செய்த போது ஆடு களத்திற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. வழக்கமாக பாம்பு தான் படம் எடுக்கும். ஆனால் மைதானத்தில் இருந்த கேமராக்கள் பாம்பை படம் பிடித்து இருந்தன.
இந்த போட்டியின் 8-வது ஓவர் வீசப்படுவதற்கு முன்னதாக பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பாம்பை பிடிக்க மைதான ஊழியர்கள் தேவையான கருவிகளுடன் விரைந்து சென்றனர்.
அதனை கவனித்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அந்த படத்தை பகிர்ந்திருந்தனர். சிலர் வியப்பினால் சுவாரஸ்யமான கேப்ஷனை அந்த படத்திற்கு போட்டிருந்தனர். ‘என்ன பாம்பெல்லாம் கிரிக்கெட் விளையாட வருது ?’, ‘அடுத்து களம் இறங்குவது பாம்பு’ என சொல்லி இருந்ததை பார்க்க முடிந்தது. இது மாதிரியான சம்பவம் இதற்கு முன்னர் கிரிக்கெட் களத்தில் நடந்தது இல்லை என சொல்லப்படுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 237 ரன்களை எடுத்தது. 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாப்பிரிக்க அணி விரட்டி வருகிறது. அந்த அணி 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்துள்ளது. ஹர்ஷ்தீப் சிங், தனது முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். முதல் ஓவரை ரன் ஏதும் கொடுக்காமல் வீசி இருந்தார் தீபக் சஹார்.