புதுடெல்லி: காயம் காரணமாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு டி20 தொடரில் எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கும் அவருக்கு பதிலாக முகம்மது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
28 வயதான ஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடியிருந்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் பும்ரா பங்கேற்கவில்லை. முதுகு வலி காரணமாக அவர், களமிறங்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பும்ரா, இந்திய அணியினருடன் திருவனந்தபுரம் பயணிக்கவில்லை என்பது தெரியவந்தது. தற்போது அவர், முதுகு வலியின் தீவிரத் தன்மையை அறிந்து கொள்ள பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். முதுகு வலி பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை என்ற போதிலும் அதில் இருந்து பும்ரா குணமடைய நீண்ட காலம் ஆகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளார். இந்த நிலையில், பும்ராவுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியுடன் சிராஜ் இன்று இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் பும்ராவுக்கு மாற்று வீரர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.