விளையாட்டு

IND-L vs AUS-L அரையிறுதியில் இர்பான் பதான், ஓஜா அட்டகாச ஆட்டம்: இறுதிக்கு முன்னேறியது இந்தியா!

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: ஆஸ்திரேலிய லெஜெண்ட்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நமன் ஓஜா மற்றும் இர்பான் பதான் பேட்டிங்கில் இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து என எட்டு நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். தொடரின் முதல் சுற்று ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றது. இந்த தொடர் டி20 ஃபார்மெட்டில் நடக்கிறது.

இதில் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்த ஆட்டம் நேற்று மற்றும் இன்று என இரண்டு ராய்ப்பூரில் நடைபெற்றது.

இதில் முதலில் ஆஸ்திரேலியா பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் 17 ஓவர்கள் முடிந்த நிலையில் மழை குறுக்கிட்டது. ஆட்டம் நின்ற இடத்தில் மீண்டும் இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆஸ்திரேலிய அணி எஞ்சிய 3 ஓவர்களில் விளையாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

கேப்டன் சச்சின் மற்றும் நமன் ஓஜா இன்னிங்ஸை தொடங்கினர். சச்சின், ரெய்னா, யுவராஜ் மற்றும் யூசுப் பதான், பின்னி போன்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காமல் விக்கெட்டை இழந்தனர். மறுமுனையில் நமன் ஓஜா அபாரமாக பேட் செய்து கொண்டிருந்தார். அவருக்கு பக்கபலமாக இர்பான் பதான் களத்திற்கு வந்தார்.

அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 26 பந்துகளில் 47 ரன்கள் தேவைப்பட்டன. இர்பான் பதான் அதிரடியாக பேட் செய்து 12 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். 4 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி அவரது இன்னிங்ஸில் அடங்கும். ஓஜா, 62 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி 19.2 ஓவர்களில் 175 ரன்களை எட்டியது. அதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வரும் 1-ம் தேதி இந்த தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. நாளை இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது அரையிறுதியில் விளையாடுகின்றன.

SCROLL FOR NEXT