இந்திய அணியின் ஆஸ்தான பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் தொடரில் இருந்து விலகுவார் என சொல்லப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 30 டெஸ்ட், 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் பும்ரா. 28 வயதான அவர் மொத்தம் 319 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 120 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் வீசும் யார்க்கரை சர்வதேச கிரிக்கெட் அணிகளின் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள சிரமப்படுவர். அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் அப்படி ஒரு டெலிவரியை அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்சுக்கு வீசி இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள ஸ்ட்ரெஸ் ஃப்ரேக்ச்சர் (எலும்பு முறிவு) தான் காரணம் என தெரிகிறது. எப்படியும் அவர் இந்த காயத்தில் இருந்து மீள ஆறு மாத காலம் வரை ஆகும் என பிசிசிஐ வட்டாரத்தில் பேச்சு. அதனால் அவர் அடுத்த சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டி உள்ளது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில், பும்ராவும் விலகுவது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.