விளையாட்டு

ரோஜர் பெடரர் ஓர் அணையா தீபம்

பெ.மாரிமுத்து

கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் எப்படி பிரமிக்க வைத்தாரோ அதே போன்றுதான் டென்னிஸ் போட்டிகளில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள 41 வயதான பெடரர், கடந்த வாரம் நடைபெற்ற லேவர் கோப்பை தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். டான் பிராட்மேனின் மட்டை வீச்சை ரசிக்காத கிரிக்கெட் ரசிகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதுபோன்றே பெடரர் தனது டென்னிஸ் மட்டையின் ஜாலத்தால் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.

ஒரு காலை ஊன்றி ஒரு கையையும் ஒரு காலையையும் காற்றில் பறக்கவிட்டு பெடரர் அடிக்கும் பேக்ஹேண்ட் ஷாட்கள்ரசிகர்களுக்கு அலாதியானவை. இந்த ஷாட்டை அவர் ஆடும்போது வெளிப்படும் நளினமும் அழகும் காண்போரை வியக்க வைக்கும்.

இதுமட்டுமா ஃபோர்ஹேண்ட் ஷாட், சர்வீஸ், ஏஸ்கள், பந்தை கட் செய்வது என பெடரர் களத்தில் மேற்கொள்ளும் அனைத்தையுமே கண் இமைக்காமல் பார்த்த ரசிகர்கள் ஏராளம். ஏன் பல்வேறு விளையாட்டு துறைகளில் கொடி கட்டி பறந்த பிரபலங்கள்கூட பெடரரின் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க தவறுவது கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக தோற்றாலும், ஜெயித்தாலும் ஜென்டில்மேனாக நடந்துகொள்ளும் அவரது பண்பு பாராட்டும்படியாக இருந்தது.

8 வயதில் டென்னிஸ் ஆடுகளத்தில் பந்துகளை சேகரித்து வழங்கும் சிறுவனாக தனது பயணத்தை தொடங்கியபெடரர் ஏறக்குறைய கால் நூற்றாண்டுகளாக டென்னிஸ் உலகை கட்டி ஆண்டுள்ளார். தனது ஆதர்ச நாயகனான பீட்சாம்ப்ராஸை 2001 விம்பிள்டன் தொடரில்வீழ்த்தியிருந்தார் பெடரர். அப்போதுபெடரருக்கு 19 வயது தான். ஜாம்பவானான பீட் சாம்ப்ராஸை வீழ்த்திய அந்ததருணத்தில் இருந்து டென்னிஸ் உலகமே பெடரரை மையமாக கொண்டு இயங்கத் தொடங்கியது.

கிராண்ட் ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் ரபேல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் பெடரை விட சற்று முன்னணியில் இருக்கலாம். ஆனால் பெடரரின் ஆட்ட புகழை வெறும்எண்களின் எண்ணிக்கைக்குள் அடக்கிவிடமுடியாது. கிரிக்கெட்டில் விவியன் ரிச்சர்ட்ஸ் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் கிடையாது.ஆனால் இன்னும் அவர் தனது தனித் தன்மைக்காகவே நினைவுக்கூரப்பட்டு வருகிறார்.

அதுபோன்றுதான் பெடரரும். அவரை டென்னிஸ் உலகின் மேதை என்று வர்ணிப்பதில் தவறு இல்லை. ஒருபடி மேலே கூறினால் அவர், டென்னிஸ் உலகின் அணையா விளக்கு போன்று சுடரொளிவீசிக்கொண்டே இருப்பார். ஐரோப்பிய கால்பந்து, பார்முலா 1 கார்ப்பந்தயம் ரசிகர்களின் மனதில் கோலோச்சிய காலத்திலும் ரசிகர்களை தனது வசீகரமான ஆட்டத்தால் கவர்ந்திழுத்தார் பெடரர்.

டென்னிஸ் சாம்பியன் என்பதையும் கடந்து நிற்கும் வீரர் பெடரர். டென்னிஸ்களத்துக்கு வெளியேயும் அனைவராலும் நேசிக்கப்படுபவராகவும், போற்றப்படுபவராகவும் திகழ்கிறார். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் பெடரர். தன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, பின்தங்கிய மக்களின் கல்வி, விளையாட்டுக்கு உதவுகிறார்.

பெடரரின் வெற்றிகளுக்கு தடையை ஏற்படுத்தியவர்கள் என்றால் அது நடாலும், ஜோகோவிச்சும்தான். இதில் பெடரர் ஓய்வு பெற்றதும் அவரை விட அதிகம் கண்ணீர் சிந்தியது நடால்தான். இருவருமே தங்களது ஆட்டங்களில்ஒருவருக்கு ஒருவர் மிஞ்சியவர்கள்தான். எனினும் நடால் மீது அவரை அறியாமலேயே பெடரர் செல்வாக்கு செலுத்திவிட்டார். களத்தில் கடும் போராளியாக திகழ்ந்தவரின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்கு நிகரான வீரர் ஒருவர் சிந்திய கண்ணீரை இதுவரை விளையாட்டு உலகம் பார்த்திராதுதான். இதற்கு பெடரரின் பணிவும், களத்தில் அவர் மேற்கொண்ட ஜாலமும்தான் காரணம். அவரைப் போன்று ஆளுமை செலுத்தும் வீரரை டென்னிஸ் உலகம் இனி பார்ப்பது அரிதுதான்.

கிராண்ட் ஸ்லாம் அரை இறுதிப் போட்டியில் 46 முறையும், கால் இறுதி சுற்றில் 58 முறையும் பெடரர் விளையாடி உள்ளார். இதன் மூலம் அதிக முறை கால் இறுதி மற்றும் அரை இறுதி சுற்றுகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

ஒற்றை கிராண்ட் ஸ்லாமில் அதிக வெற்றிகளை குவித்த வீரர்கள் இருவர் மட்டுமே. அதில் ஒருவர் பெடரர். அவர், ஆஸ்திரேலிய ஓபனில் 102 வெற்றிகளையும், விம்பிள்டனில் 105 வெற்றிகளையும் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நடால் பிரெஞ்சு ஓபனில் 112 வெற்றிகளை குவித்துள்ளார்.

ரோஜர் பெடரரும், ரபேல் நடாலும் கிரான்ட் ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

பெரிய அளவிலான தொடர்களில் பெடரர் 369 வெற்றிகளை குவித்துள்ளார். இந்த அளவிலான வெற்றிகளை எந்த வீரரும் எட்டியதில்லை.

ஒரு ஆண்டில் 4 கிரான்ட் ஸ்லாம் போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில், 2006, 2007, 2009 ஆகிய 3 ஆண்டுகளிலும் அனைத்து கிரான்ட் ஸ்லாம் இறுதிப்போட்டிகளிலும் விளையாட பெடரர் தகுதிபெற்றிருந்தார்.

1999ல் பிரெஞ்சு ஓபனில் மெயின் டிராவில் அறிமுகமான பெடரர், 81 கிரான்ட் ஸ்லாம்களில் விளையாடி உள்ளார். அந்த வகையில் அதிக கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஸ்பெய்னின் பெலிசியோனோ லோபஸுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT