தோள்பட்டை எலும்பு முறிவினால் மீண்டும் 6 மாதகாலம் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள டேல் ஸ்டெய்னுக்காக பெர்த் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற விரும்புவதாக வெர்னன் பிலாண்டர் தெரிவித்தார்.
“பெரிய வீரர்களை இழப்பது அணியில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது. ஆனாலும் வேறொருவர் தங்களது ஆட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பெர்த் டெஸ்ட் போட்டியில் அது போன்று எனக்கும், ரபாதாவுக்கும் ஆட்டத்தை சற்றே உயர்த்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. டேல் ஸ்டெய்ன் நீண்ட காலமாக இதனைச் செய்து வந்தார், இப்போது இந்த வாய்ப்பை ஒரு உத்வேகமாகக் கருதி நானும் ரபாதாவும் ஆட்டத்தை உயர்த்துவோம். ஸ்டெய்னுக்காக நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்த பந்து வீச்சு வரிசையின் நீண்ட காலத் தலைவர் டேல் ஸ்டெய்ன், அவர் இன்று காயமடைந்து விளையாட முடியாமல் போனது கடும் வேதனை அளிக்கிறது. எங்கள் கையில் பணி உள்ளது, ஆஸ்திரேலியாவை விரைவில் சுருட்ட வேண்டியிருந்தது. அதனை நாங்கள் ஓரளவுக்கு சிறப்பாகவே செய்து முடித்தோம்.
இந்தப் பொறுப்பை ஒரு அணியாக நாங்கள் சுமக்கிறோம், டேல் ஸ்டெய்னுக்காக இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற விரும்புகிறோம்” என்றார்.
அவரிடம் ஆட்டமிழந்த டேவிட் வார்னர் கூறும்போது, “இந்தத் தொடருக்கு முன்பாக இந்தத் தொடரில் ஒரு பெரிய பங்கு வகிப்பதான உற்சாகத்திலும் உத்வேகத்திலும் இருந்த டேல் ஸ்டெய்னுக்கு காயம் ஏற்பட்டது எங்களுக்கு கடும் ஏமாற்றமளிக்கிறது. அவரும் கடும் ஏமாற்றமடைந்திருப்பார்” என்றார்.