விளையாட்டு

ராஜ்கோட் டெஸ்ட் டிராவுக்குக் காரணம் பிட்ச் அல்ல; கேட்ச்களை விட்டதே: கோலியை மறுக்கும் நிரஞ்சன் ஷா

இரா.முத்துக்குமார்

ராஜ்கோட் பிட்சில் நிறைய புற்கள் காணப்பட்டது தனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று விராட் கோலி விமர்சன தொனி காட்ட, சவுராஷ்டிர கிரிக்கெட் சங்க செயலர் நிரஞ்சன் ஷா, டிரா பிட்சினால் அல்ல கேட்ச்களைக் கோட்டை விட்டதினால் என்றார்.

விராட் கோலி நிறைய புற்கள் இருந்தன பிட்சில், அப்படி இருந்திருக்கக் கூடாது என்று தனது அதிருப்தியை வெளியிட்டதையடுத்து சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க செயலர் நிரஞ்சன் ஷா கூறியதாவது:

இது முறையான டெஸ்ட் பிட்ச். நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டி 5-ம் நாள் இறுதி வரை சென்றிருக்கிறது. பிட்சில் இருந்த புற்களினால் பந்துகள் ஸ்பின் ஆகவில்லை என்று கூறுவதற்கில்லை.

டெஸ்ட் போட்டிகளின் முதல்நாள் ஆட்டத்தில் பிட்சில் ஈரப்பதமும், புற்களும் இருப்பது வழக்கமானதுதான், அது வளமையான மண் என்பதால் மறுநாளும் புற்கள் இருந்தன, 5-ம் நாளும் புற்கள் மறையவில்லை.

மேலும் பிட்சை மூடி வைப்பதால் புற்கள் மீண்டும் முளைக்கின்றன. ஒரு அணி கேப்டன் உள்நாட்டில் ஆடும் சாதக சூழ்நிலைகளை எதிர்பார்ப்பதில் தவறில்லை.

பிட்சில் புற்கள் இருந்ததால் பந்துகள் திரும்பவில்லை என்பதை ஏற்று கொள்ள முடியாது. இதற்கு முன்பு புற்கள் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுப்பதை தடுக்கவில்லை. இந்திய அணியின் தேவையெல்லாம் சரிதான், ஆனால் ஒவ்வொரு தேவைப்பாடையும் பிட்ச் தயாரிப்பாளர் பூர்த்தி செய்வதென்பது கடினம். அது ஒரு நல்ல டெஸ்ட் போட்டி.

எப்போதும் பிட்சைக் குறை கூற முடியாது. சில கேட்ச்களை தொடக்கத்திலேயே கோட்டை விட்டோம். பிட்சில் புற்களின் அளவு பந்தை திருப்புவதற்கு தடையாக இருக்க முடியாது. ராஜ்கோட்டைப் பொறுத்தவரை எனக்கு தெரிந்தது இவைதான்

இவ்வாறு கூறினார் நிரஞ்சன் ஷா.

SCROLL FOR NEXT