விளையாட்டு

கிரிக்கெட் வாரியத் தலைவரை ‘பெரிய முட்டாள்’ என்று திட்டிய டேரன் பிராவோ நீக்கம்

ஏஎஃப்பி

மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்ததத்தில் சி-பிரிவு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதையடுத்து வாரியத் தலைவரை ‘பெரிய முட்டாள்’ என்று திட்டிய டேரன் பிராவோ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வேயில் நடைபெறும் முத்தரபு ஒருநாள் தொடரில் பங்கேற்கும் மே.இ.தீவுகள் அணியிலிருந்து டேரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார்.

டேரன் பிராவோவின் ஃபார்ம் அவருக்கு ஏ-கிரேடு ஒப்பந்தம் வழங்குவதைத் தடுப்பதாக மே.இ.தீவுகள் வாரிய தலைவர் டேவ் கேமரூன், டேரன் பிராவோவுக்கு சி-கிரேடு ஒப்பந்தம் வழங்கினார்.

இது குறித்து தனது ட்விட்டரில் டேரன் பிராவோ, “கடந்த 4 ஆண்டுகளாக நீங்கள் ஒரு தோல்வியடைந்த தலைவராக இருக்கிறீர்கள். எனக்கு ஏ-கிரேடு கிடையாதா. மிகப்பெரிய முட்டாள், நீங்கள் ஏன் ராஜினாமா செய்யக்கூடாது” என்று சாடியிருந்தார்.

இதனையடுத்து மே.இ.தீவுகள் வாரியம் கூறும்போது, “பிராவோவுக்குப் பதிலாக ஜேசன் மொகமது அணியில் சேர்க்கப்படுகிறார், பிராவோவின் நடத்தை முறையற்றது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒப்பந்த விதிமுறைகளை அவர் தனது நடத்தை மூலம் மீறியுள்ளார், என்று கூறியுள்ளது .

95 ஒருநாள் போட்டிகளில் டேரன் பிராவோ 2,595 ரன்கள் எடுத்துள்ளார். மே.இ.தீவுகள் அணிக்காக ஐபிஎல் உள்ளிட்ட பணம் பெருக்கும் டி20 தொடர்கள் எதையும் விளையாடாமல் துறந்தவர் டேரன் பிராவோ. ஆனால் அவரையும் இப்படித்தான் வெளியேற்றுகிறது மே.இ.தீவுகள் வாரியம்.

மே.இ.தீவுகள் அணி வருமாறு: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுலைமான் பென், தேவேந்திர பிஷூ, கார்லோஸ் பிராத்வெய்ட், கிரெய்க் பிராத்வெய்ட், ஜொனாதன் கார்ட்டர், ஜான்சன் சார்லஸ், மிகுவெல் கமின்ஸ், ஷேன் டவ்ரிச், ஷனன் கேப்ரியல், ஷாய் ஹோப், எவின் லூயிஸ், ஜேசன் மொகமது, ஆஷ்லி நர்ஸ், ரோவ்மன் போவெல்

SCROLL FOR NEXT