தேசிய மற்றும் மாநில அளவில் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களும், நூற்றுக் கணக்கான கோப்பை களும் வென்ற மாற்றுத் திறனாளி தடகள வீரர், தற்போது பயிற்சியில் ஈடுபடவும், போட்டிகளில் பங்கேற்பதற்கும் பொருளாதார வசதியின்றிச் சிரமப்படுகிறார்.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(30). இவரது தந்தை சுமை தூக்கும் தொழிலாளி. 5 வயதில் விபத்து ஒன்றில் இடது கையில் பாதியை இழந்த செந்தில்குமார், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்தார்.
9-ம் வகுப்பு வரை விளை யாட்டுப் போட்டிகள் குறித்த அறிமுகம் இல்லாத செந்திலுக்கு பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற தடகளப் போட்டிதான் முதல் வாய்ப்பு. பொதுப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் குண்டு எறிதலில் இரண்டாம் இடம் பிடித்த இவரிடம் வெளிப்பட்ட அசாத்திய திறமையைப் பார்த்த உடற்கல்வி ஆசிரியர், மாற்றுத் திறனாளிகளுக்கென நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து 2002-ம் ஆண்டு அரியலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான, மாற்றுத் திறனாளிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார். தொடர்ந்து சென்னையில் மாநில அளவில் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், மைசூரில் தென் மண்டல அளவிலான போட்டியில் ஈட்டி எறிதலில் முதலிடம் மற்றும் 100 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடம், பெங்களூருவில் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று மூன்று பிரிவுகளில் 2-ம் இடம் பிடித்தார். மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதால் நூற்றுக் கணக்கான கோப்பைகள், பதக்கங்கள் இவருடையே வீட்டை அலங் கரித்து வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான எப்-46 பிரிவில் பங்கேற்கும் செந் தில்குமார், தேசிய அளவில் பல வெற்றிகளைப் பெற்றும், போதிய பணவசதியின்றி அடுத்த கட்டத் துக்கு முன்னேறிச் செல்லமுடி யாமல் தவிக்கிறார்.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் செந்தில்குமார் கூறும்போது, “சென்னையில் நடைபெற்ற போட் டிக்கே முசிறியில் இருந்து லாரி யில்தான் சென்றேன். அதேபோல ரூ.500 கடன் வாங்கிக்கொண்டு தான் தேசிய அளவில் பெங்களூரு வில் நடைபெற்ற நீச்சல் போட்டிக் குச் சென்றேன். போட்டிக்கு முதல் நாள் இரவும், காலையும் சாப்பிடாமல் இருந்த நிலை யிலும் கூட 3 பதக்கங்களை வென்றேன்.
அப்போது தாய்லாந்தில் நடந்த போட்டிக்குத் தேர்வு செய்யப் பட்டேன். ஆனால், பாஸ்போர்ட் உள்ளிட்ட செலவுகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஆகும் என்றார்கள். 500, 1000 ரூபாய்க்கே வழியில்லாத நான் 50 ஆயிரம் ரூபாய்க்கு எங்கே செல்வேன்?.
தற்போது, திருமணம் ஆகிவிட்ட தால் குடும்பத்தைக் காப்பாற்று வதற்காக டாஸ்மாக் பார் ஒன் றில் வேலை செய்கிறேன். தினமும் கூலியாக ரூ.300 வரை கிடைக் கிறது. பாரில் வேலை செய்தாலும் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் கனவுடன் தினமும் காலை நேரத்தில் எங்கள் ஊரில் கடின பயிற்சி மேற்கொண் டுள்ளேன்” என்றார்.
பயிற்சிக்கான உடைகள், உபகரணங்கள் வாங்குவதற்காக 2 வாரத்துக்கு முன் 10 ஆயிரம் ரூபாயை ஆட்சியர் வழங்கியதை நன்றியுடன் கூறிய செந்தில்குமார், “அடுத்தடுத்து நடைபெற உள்ள மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உதவி கிடைத்தால், பாராலிம்பிக் போட்டி யில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தனது கனவு நிறைவேறும்” என்றார் நம்பிக்கையுடன்.