கென்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 111 பந்துகளில் 143 ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள ஆறாவது சதம் இது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி இழந்த நிலையில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் அதிகபட்சமாக 143 ரன்கள் குவித்திருந்தார். அதிலும் அவர் சதம் பதிவு செய்த பிறகு எதிர்கொண்ட அடுத்த 11 பந்துகளில் 43 ரன்கள் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 18 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் தனது இன்னிங்ஸில் விளாசி இருந்தார்.
இங்கிலாந்து அணி அந்த இலக்கை விரட்டி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசியாக கடந்த 1999 வாக்கில் இந்திய அணி இங்கிலாந்தில் ஒருநாள் தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இப்போதுதான் தொடரை வென்றுள்ளது.
இந்திய அணி சார்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீராங்கனைகளுக்கான பட்டியலில் தலா 5 சதங்களுடன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் உள்ளனர். 7 சதங்களுடன் மித்தாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.